சென்னையில் ஒரு பல  இடங்களில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் 11 மணி வரை பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்ததில் பல இடங்களில் அதிக அளவு மழைப்பொழிவு பதிவாகியது. குறிப்பாக அதிகபட்சமாக மணலியில் 26 சென்டிமீட்டர் மழையும், கொரட்டூரில் 18 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

அதேபோல் அம்பத்தூர், நெற்குன்றம், பாரிமுனை, கொளத்தூர், காசிமேடு, வளசரவாக்கம், தண்டையார்பேட்டை, அமைந்தகரை, புழல், துறைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பதிவாகியது. சென்னையில் நள்ளிரவு பெய்த இந்த கனமழை காரணமாக விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் நான்கு விமானங்கள் பெங்களூர் திரும்பியது.

சென்னையில் பல இடங்களில் ஒரு மணி நேரத்திற்குள் 10 சென்டிமீட்டர் அதிக கன மழை பதிவாகிய நிலையில் சென்னையில் முதல் முறையாக மேக வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் புதுச்சேரி மாநிலத்தில் மேக வெடிப்பு நிகழ்வதற்கு வாய்ப்புள்ளதால் அனைத்து துறைகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் சுற்றறிக்கை வாயிலாக அறிவுறுத்தல் கொடுத்துள்ளார். முன்கூட்டியே மேக வெடிப்புகளை கணிக்க முடியாத நிலை இருப்பதால் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக  உள்ளாட்சி அமைப்புகள், காவல்துறை, மருத்துவத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.