வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே மூலக்காங்குப்பம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஊரின் நடுவே கெங்கையம்மன் கோவில் அருகே செல்லும் கானாற்றில் தற்போது தொடர் கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஊருக்குள் செல்ல முடியாததால், பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர்.
அதுமட்டுமல்லாமல் சுற்றுப்புறத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களும் கானாற்றை கடந்து அந்தப்பக்கம் உள்ள பள்ளிக்கு தான் செல்ல வேண்டும் . எப்போதெல்லாம் மழை வருகிறதோ அப்போதெல்லாம் கானாற்றில் வெள்ளம் ஏற்படும் போது அந்தப் பக்கம் இருக்கிற மக்கள் இந்த பக்கம் வர முடியாமலும், இந்தப் பக்கம் இருக்கிற மக்கள் அந்தப் பக்கம் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை மனுக்களை கொடுத்தும் இதுவரை யாரும் எங்களை வந்து பார்த்து ஒரு சிறிய பாலம் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இந்தத் தொகுதியின் அதிமுக சின்னத்தில் நின்று போட்டியிட்ட புரட்சி பாரதம் எம்எல்ஏவான பூவை.ஜெகன்மூர்த்தியும் அது குறித்து கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. ஆகவே கிராம மக்கள் ஒன்று சேர்ந்து சொந்த செலவில் கானாற்றின் குறுக்கே மரப்பாலம் அமைத்து செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
இனிமேலாவது தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் எங்களை நேரில் வந்து பார்த்து ஆய்வு செய்து நாங்கள் அமைத்திருக்கும் மரப்பாலத்தை அகற்றி நிரந்தர பாலம் அமைத்துத் தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.