புதுச்சேரியில் மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஏராளமான மாணவ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் இங்கு பணியாற்றி வரும் பேராசிரியர்கள் மீது மாணவிகள் பலரும் பாலியல் புகார்களை அளித்திருந்தனர். இதனையடுத்து பாலியல் புகார்களுக்கு உள்ளான பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவ மாணவியர்கள் ஏராளமானோர் துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, “மாணவிகள் அளித்த பாலியல் புகார்களைப் பல்கலைக்கழக நிர்வாகம் மூடி மறைக்க முயற்சி செய்கிறது. 

Advertisment

பாலியல் புகார்களுக்கு உள்ளான பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்ற குற்றச்சாட்டை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவியர்களை நள்ளிரவில் வலுக்கட்டாயமாக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பேராசிரியர்கள் மீதான பாலியல் புகார்களைப் பல்கலைக்கழக நிர்வாகம் மூடி மறைக்க முயற்சிப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட சம்பவம் சக மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. 

Advertisment

முன்னதாக இந்த பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் பணியாற்றி வரும் பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவி ஒருவர் அவரது உறவினருக்கு செல்போன் வாயிலாகப் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகிக் கேட்போர் மனதைப் பதைபதைக்க வைத்தது. அதிலும் குறிப்பாகக் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மாணவிகளுக்கு அதிகளவில் அவர் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.