திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் சார்பில் 154 கல்லூரிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்ட பாக்சிங் போட்டி கடந்த மாதம் நடந்தது. இதில் 12 வீரர்கள் தேசிய பாக்சிங் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர். இந்த நிலையில் மார்ச் 2 முதல் 7 ந் தேதி வரை அரியானாவில் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பாக்சிங் போட்டி நடைறெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க இந்தியா முழுவதும் இருந்து பல்கலைக் கழக நிர்வாகங்கள் தங்கள் வீரர்களை அழைத்துச் சென்றுகொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 12 பேருக்கு இன்று இரவு சென்னையில் இருந்து டெல்லிக்கு ரயிலில் சென்று அங்கிருந்து அரியானா செல்ல திட்டமிடப்பட்டு 12 வீரர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (27.02.2026) காலை வீரர்கள் புறப்பட இருந்த நிலையில் திடீரென திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் இருந்து அழைத்து ஸ்போர்ட்ஸ் மேனேசர் விடுப்பில் சென்றுவிட்டார். அதனால் உங்களை அரியான அழைத்துச் செல்ல ஆள் இல்லை நீங்கள் யாரும் கிளம்ப வேண்டாம் என்று கூறியதால் கனவுகளோடு இருந்த 12 வீரர்களும் இடிந்து போய் உள்ளனர். இது சம்மந்தமாக புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி மாணவரான பாக்சிங் வீரர் கிஷோர்குமார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “எங்கள் கனவு இந்த பாக்சிங். கடுமையான பயிற்சியில் வெற்றி பெற்று இப்போது தேசிய போட்டிக்கு புறப்படும் நேரத்தில் மேனேசர் இல்லை என்று சாதாரணமாக சொல்கிறார்கள். இதனால் எங்கள் கனவு தகர்ந்து போகுமோ என்றுள்ளது. பல்கலைக்கழக மேலாளர் இல்லாமல் நாங்கள் தனியாக போய் பங்கேற்கவும் முடியாது ஆகவே விளையாட்டுத்துறை அமைச்சரான துணை முதலமைச்சர் எங்கள் கனவை நிறைவேற்ற துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களை போட்டிக்கு அனுப்ப வேண்டும்” என்றார். பல்கலைக் கழக அலட்சியத்தால் 12 விளையாட்டு வீரர்களின் கனவு சிதைந்து கொண்டிருக்கிறது.
Follow Us