தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அதேபோல் அ.தி.மு.க. - பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. 

Advertisment

அதேபோல் விஜய்யின் த.வெ.க.கவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தே.மு.தி.க. எந்த கூட்டணியில் இடம் பெரும் என்பதை அறிவிக்காமல் பொறுமை காத்து வருகிறது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் நாளை (13.02.2026) திருச்சிக்கு வருகை தர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது திருச்சியில் நாளை பா.ஜ.க. மையக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. 

Advertisment

இதில் மையக் குழு உறுப்பினர்களுடன் மத்திய அமைச்சர்கள் இருவரும் ஆலோசனையில் ஈடுபட உள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது கூட்டணி தொகுதி பங்கிடு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளனர். இந்த கூட்டத்தில் பா.ஜ.க.வின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்திற்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் மத்திய அமைச்சர்களின் தமிழக வருகை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.