Union Minister treated her with food at Priyanka Gandhi's request in Parliament
இந்தாண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எஸ்.ஐ.ஆர் உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், விபி-ஜி ராம் ஜி உள்ளிட்ட மசோதாக்களும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை மீறி நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த கூட்டத்தொடரில் ஒரு பகுதியாக, பிரியங்கா காந்திக்கும், மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கும் இடையே வேடிக்கையான விவாதம் நடைபெற்றது.
காங்கிரஸ் பொதுச் செயலாளரும் வயநாடு எம்.பியுமான பிரியங்கா காந்தி நேற்று (18-12-25) மக்களவையில் பேசும் போது சண்டிகர்- சிம்லா நெடுஞ்சாலை தொடர்பாக பேசினார். மேலும் தனது வயநாடு தொகுதியில் உள்ள நெடுஞ்சாலை பிரச்சனைகள் குறித்து சந்தித்து பேச மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிடம் அனுமதி கேட்டார். அதில் பிரியங்கா காந்தி பேசியதாவது, “சார், எனது தொகுதியின் நெடுஞ்சாலைகளில் பல இடங்களில் தடுப்புச் சுவர் மிகவும் தாழ்வாக இருப்பதால் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருக்கிறது. எனவே இந்த விஷயத்தை தயவுசெய்து கவனிக்குமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்? எனவே, எனக்கு ஒரு சந்திப்பை வழங்குமாறு நான் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். ஜூன் மாதத்திலிருந்து எனது தொகுதியைப் பற்றிப் பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன், சார்” என்று கோரினார்.
அதற்கு பதிலளித்த நிதின் கட்கரி, “எனது கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்... எந்த சந்திப்பும் தேவையில்லை” என்று கூறியதும் பிரியங்கா காந்தி சிரித்தபடியே சரி என்று கூறி இருக்கையில் அமர்ந்தார். இருவருக்கும் இடையிலான உரையாடல் அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
அதனை தொடர்ந்து கூட்டத்தொடர் முடிந்ததும், பிரியங்கா காந்தி மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்திற்குச் சென்று சந்தித்துப் பேசினார். அதில் கேரளா வழியாகச் செல்லும் ஆறு சாலைத் திட்டங்கள் குறித்து பேசப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சந்திப்பின் போது நிதின் கட்கரி, “உங்கள் சகோதரர் ராகுல் காந்தி சமீபத்தில் அவரது தொகுதியான ரேபரேலியில் உள்ள சில சாலைகள் குறித்து என்னை சந்தித்தார். உங்கள் சகோதரரின் கவலைகளை தீர்த்து, உங்கள் கவலைகளை நான் கவனிக்கவில்லை என்றால் நீங்கள் புகார் செய்வீர்கள்” என்று கூறினார். உடனே பிரியங்கா காந்தி மற்றும் அறையில் இருந்தவர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது. இந்த சந்திப்பின் போது பிரியங்கா காந்திக்கு உணவு, இனிப்பு வகை பரிமாறப்பட்டது.
Follow Us