கடந்த 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி நள்ளிரவில் இந்தியாவில் அவசரநிலை சட்டத்தை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அமல்படுத்தினார். இதனால், நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் நடவடிக்கைகளுக்கு உள்ளாகினர். பத்திரிகைகள் தனிக்கை செய்யப்பட்டது. இதனால் மக்கள், அரசியல் கட்சியினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். பலரும் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் கழித்து 1977-ம் ஆண்டு மார்ச் 21-ந் தேதி இந்தியாவில் அவசர நிலை பிரகடனம் திரும்பப் பெறப்பட்டது.

இதனை தொடர்ந்து, நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்திய தினமாக ஜூன் 25 ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைப்பிடிக்கப்படும் என மத்திய பா.ஜ.க அரசு அறிவித்தது. நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்து கடந்த 25ஆம் தேதியன்று 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. இந்த தினத்தையொட்டி பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலரும் காங்கிரஸை விமர்சனம் செய்தனர். அந்த வகையில் அவசரநிலையின் 50 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே கலந்துகொண்டு பேசிய போது, “அவசரநிலையின் போது மதச்சார்பற மற்றும் சோசலிசம் என்ற இரண்டு வார்த்தைகள் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டன. அதன் பின்னர், இந்த வார்த்தைகள் நீக்கப்படவில்லை. அவை அப்படியே இருந்தாலும் இல்லாவிட்டாலும், இது குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும். இந்த இரண்டு வார்த்தைகளும் டாக்டர் அம்பேத்கரின் அரசியலமைப்பில் இல்லை. அவசரநிலையின் போது, நாட்டில் பாராளுமன்றம் செயல்படவில்லை, உரிமைகள் இல்லை, நீதித்துறை இல்லை. ஆனால் இந்த இரண்டு வார்த்தைகளும் சேர்க்கப்பட்டன. அவசரநிலையை அமல்படுத்தியவர்கள் இன்று அரசியலமைப்பின் நகல்களோடு சுற்றித் திரிகிறார்கள்.

அவசரநிலையை கொண்டு வந்ததற்காக அவர்கள் இன்று வரை மன்னிப்பு கேட்கவில்லை. நீங்கள் 1 லட்சம் பேரை சிறை அடைத்தீர்கள், 250க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை சிறையில் அடைத்தீர்கள், 60 லட்ச இந்தியர்களை கருத்தடை செய்ய கட்டாயப்படுத்தினீர்கள், நீதித்துறையின் சுதந்திரத்தை முடிவுக்கு கொண்டு வந்தீர்கள். இதை செய்த அனைவரும் நாட்டிடம் மன்னிப்பு கேட்டார்களா?. அது நீங்கள் அல்ல, உங்கள் மூதாதையர்கள் என்றால், நீங்கள் அவர்களின் பெயரில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார். அரசியலமைப்பில் மதச்சார்பற்ற மற்றும் சோசலிசம் வார்த்தைகள் இடம்பெற வேண்டுமா என்பது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் கூறியதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வந்தன.

Advertisment

இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளரின் கருத்தை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆதரித்து பேசி மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஜிதேந்திர சிங்கிடம் ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் கருத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜிதேந்திர சிங், “இதில் எந்த சந்தேகமும் இல்லை. 45வது திருத்தத்திற்குப் பிறகு மதச்சார்பற்ற மற்றும் சோசலிசம் என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டுள்ளதாக தத்தாத்ரேயா ஹோசபாலே கூறியுள்ளார். டாக்டர் அம்பேத்கர் உலகின் மிகச்சிறந்த அரசியலமைப்புகளில் ஒன்றை உருவாக்கியுள்ளார். இது அவரது சிந்தனை இல்லையென்றால், பின்னர் எப்படி இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. டாக்டர் அம்பேத்கரும் குழுவின் மற்றவர்களும் எழுதிய அசல் அரசியலமைப்பு ஆவணத்தின் ஒரு பகுதியாக அவை இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். அதனால், சரியான சிந்தனை கொண்ட எந்த குடிமகனும் அதை ஆதரிப்பார். இது ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாப்பது பற்றிய விஷயம்” என்று கூறினார். இதற்கு எதர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.