மறப்பது மனித இயல்பு... அப்படி நாம் சில நேரங்களில் ஏதோ ஒரு பொருளை மறந்து வைத்துவிட்டு செல்வது வழக்கம். ஆனால், மத்திய அமைச்சர் ஒருவர் அவசரத்தில் தனது மனைவியையே மறந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிவராஜ் சிங் சவுகான், பாஜகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், பாஜக சார்பில் விதிஷா தொகுதியில் போட்டியிட்டு, காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் பானுவைத் தோற்கடித்து வெற்றி பெற்றார். அதன்பின், மத்தியில் அமைந்த பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில், மத்திய வேளாண் துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தனது மனைவி சாதனா சவுகானுடன் துறை ரீதியான பயணம் மேற்கொள்ளவும், ஆன்மிகப் புனிதத் தலங்களுக்கு செல்லவும் குஜராத் மாநிலத்திற்கு சென்றிருந்தார். அப்போது, குஜராத்தில் உள்ள கோவில்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தனது மனைவியுடன் சென்ற சிவராஜ் சிங் சவுகான், ஜுனாகத் என்ற இடத்தில் உள்ள ஓய்வு விடுதியில் தனது மனைவியை இருக்கச் சொல்லிவிட்டு, நிலக்கடலை ஆராய்ச்சி மையத்திற்கு சென்றுள்ளார். அதன்பின், ஆராய்ச்சி மையத்தில் பெண்களுடன் கலந்துரையாடிய அவர், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கியிருக்கிறார்.

அந்த நேரத்தில், விமானத்திற்கு தாமதமாகிவிட்டதை உணர்ந்த மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பேச்சைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு, "அடுத்த முறை விரிவாகப் பேசலாம்" என்று கூறி, அவசரம் அவரமாக அங்கிருந்து புறப்பட்டார். அவருடன் வந்த 22 கார்கள் அடங்கிய கான்வாயும் சூரத்தை நோக்கி விரைந்தது. இதைத் தொடர்ந்து, தனது கான்வாயுடன் காரில் வேகமாகச் சென்று கொண்டிருந்த சிவராஜ் சிங் சவுகானுக்கு, சுமார் 10 நிமிடங்கள் கழித்துதான் மனைவி சாதனா சவுகானின் ஞாபகம் வந்திருக்கிறது. இதனால் பதறி துடித்த சிவராஜ் சிங் சவுகான், மனைவியை அழைத்து தொலைபேசியில் விஷயத்தைக் கூறிவிட்டு, "வண்டியைத் திருப்புங்கள்" என்று ஓட்டுநருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Advertisment

பின்னர், ஜுனாகத் சென்ற மத்திய அமைச்சர், நடந்தவற்றைக் கூறி மனைவியைச் சமாதானப்படுத்தி, அங்கிருந்து அழைத்துச் சென்றார். தற்போது இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் வெளியாகி பேசுபொருளாக மாறியுள்ளது.