தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளமாகச் செங்கோட்டை விளங்கி வருகிறது. இங்குள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் முதலாவது நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று, நேற்று (10.11.2025) மாலை பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால், அருகே இருந்த சில வாகனங்கள் தீப்பற்றி எரிந்து தீக்கிரையாகி உருக்குலைந்தன.
இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் அங்கு விரைந்து சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் டெல்லி மட்டுமல்லாது நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் டெல்லி பாதுகாப்பு பேச்சுவார்த்தையில் (Delhi Defence Dialogue) பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் இன்று (11.11.2025) உரையாற்றினார். அப்போது அவர் டெல்லி செங்கோட்டை கார் வெடிப்பு குறித்துக் கூறுகையில், “டெல்லியில் நேற்று நடந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த அனைவருக்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த ஆழ்ந்த துக்க நேரத்தில், துயரமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு வலிமையையும் ஆறுதலையும் அளிக்கக் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். நாட்டின் முன்னணி புலனாய்வு அமைப்புகள் இந்த சம்பவம் குறித்து விரைவான மற்றும் முழுமையான விசாரணையை நடத்தி வருகின்றன என்பதை எனது குடிமக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். விசாரணையின் முடிவுகள் விரைவில் வெளிப்படையாகப் பகிரங்கப்படுத்தப்படும். இந்த துயர சம்பவத்திற்குக் காரணமானவர்கள் நீதியின் (சட்டத்தின்) முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், எந்த சூழ்நிலையிலும் அவர்கள் தப்பிக்க மாட்டார்கள் என்றும் நான் தேசத்திற்கு உறுதியாக உறுதியளிக்க விரும்புகிறேன்.” எனத் தெரிவித்தார்.
மற்றொருபுறம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது இல்லத்தில் பாதுகாப்பு தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறைச் செயலாளர் கோவிந்த் மோகன், புலனாய்வுப் பணியகத்தின் இயக்குநர், தேசிய புலனாய்வு அமைப்பின் இயக்குநர் ஜெனரல், டெல்லி காவல் ஆணையர் ஆகியோர் கலந்து கொண்டனர். ஜம்மு காஷ்மீர் போலீஸ் டிஜிபியும் இந்தக் கூட்டத்தில் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/11/rajnath-singh-2025-11-11-12-21-22.jpg)