மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், டெல்லி தலைநகர் (என்.சி.ஆர்.) பகுதியில் மோசமடைந்து வரும் காற்று மாசுபாடு குறித்து கடும் கவலை தெரிவித்தார். தலைநகரில் சிறிது காலம் தங்கியிருந்தாலே தனது உடல்நிலை பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். காற்றுமாசடைவது குறித்து பேசிய கட்கரி, இந்தியா புதைபடிவ எரிபொருட்களை சார்ந்து இருப்பது குறித்து கேள்வி எழுப்பினர், ஆண்டுதோறும் புதைபடிவ எரிபொருட்களுக்காக இந்தியா சுமார் ₹22 லட்சம் கோடி செலவிடுவதாகத் தெரிவித்தார்.
அதிலும் குறிப்பாக அவர் பேசுகையில்,“நான்தான் போக்குவரத்துத் துறை அமைச்சர், 40 சதவீத மாசுபாடு போக்குவரத்திலிருந்து தான் வருகிறது என்றால், அந்தப் பொறுப்பும் என்னுடையதுதான். உலக அளவில் புதைபடிவ எரிபொருட்களும் குறைவாகவே உள்ளன, மாறாக காற்று மாசடைதலும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. எனவே, நாம் மின்சாரம் மற்றும் ஹைட்ரஜன் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு விரைவில் மாறவேண்டும். முழுவதுமாக எத்தனால் மூலம் இயங்கக்கூடிய, சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களை இயக்க முயற்சிக்க வேண்டும்.
டெல்லியின் அண்டை நகரமான நொய்டா, நாட்டின் மிகவும் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அப்பகுதியில் காற்றுத் தரம் மிகவும் மோசமான நிலையிலேயே உள்ளது. தலைநகர் டெல்லி, இந்தியாவிலேயே இரண்டாவது மிகவும் மாசடைந்த நகரமாக மாற்றியுள்ளது. நான் இங்கு மூன்று நாட்கள் தங்கினால், மாசுபாடு காரணமாக எனக்கு ஒவ்வாமை ஏற்படுகிறது,” என்றும் கூறினார். மத்திய அமைச்சரின் இந்த பேச்சு காற்று மாசடைதலால் தலைநகர் எவ்வளவு பதிப்பிற்குள்ளாகியிருக்கிறது என்பதை வெளிப்படையாகவே தெரியப்படுத்துவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Follow Us