பாஜக மத்தியில் ஆட்சியமைத்ததிலிருந்தே எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கான செயல்களில் ஈடுபட்டு வருவதாக, பிரதான எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன. அந்த வகையில், மாநில அரசுகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாமலிருப்பது, ஆளுநர்கள் மூலமாக மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுப்பது போன்ற செயல்களில் பாஜக ஈடுபடுவதாக, எதிர்க்கட்சிகளால் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில், தமிழ்நாடு காங்கிரசின் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, பாஜக அரசுக் கல்விக்காகத் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டிய 3400 கோடியைத் தராமல் இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.
பாஜகவின் இது போன்ற நடவடிக்கைகளால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களும் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் ஆத்வாலே கூறிய கருத்துக்கள் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கேரளா முதல்வர் பினராயி விஜயன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்.டி.ஏ.) இணைந்தால், அது புரட்சிகரமானதாக இருக்கும். இதனால், கேரளாவிற்கு அதிக அளவு நிதி கிடைக்கும். அந்த நிதியை அவர்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம்" எனக் கூறியிருந்தார்.
அதாவது, பாஜகவுடன் கூட்டணி வைத்தல் தான் மாநிலங்களுக்கு உரிய நிதி வழங்கப்படும், இல்லையென்றால் அம்மாநிலங்களுக்கு போதுமான நிதி வழங்கப்படாது என்ற தொனியில் அமைந்துள்ளதாகக் கருதப்படும் இந்த கருத்திற்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் எம்.வி. கோவிந்தன், "மத்திய அமைச்சரின் இந்த கருத்துக்கள் ஜனநாயகத்திற்கு முரணானதாக உள்ளது. மேலும், இந்த கருத்துக்கள் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இது, அனைத்து அரசு நிறுவனங்களையும் ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் கொண்டு வரும் ஒரு முயற்சி" என்று கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.
Follow Us