விண்வெளியில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக ‘ஆக்சியம்-4’ என்ற திட்டத்தில் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட அமெரிக்கா, போலந்து, மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்த 4 பேர் கடந்த ஜூன் 25ஆம் தேதி பகல் 12:01 மணிக்கு பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்வெளிக்கு வெற்றிகரமாகப் புறப்பட்டனர். 41 ஆண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நேரடி இந்தியராக சர்வதேச விண்வெளிக்குச் செல்லும் இந்திய என்ற பெருமையை சுபான்ஷு சுக்லா பெற்றதால் அவருக்கு நாடு முழுவதும் பாராட்டுத் தெரிவித்தனர். விண்கலத்தை சுபான்ஷு சுக்லா இயக்கிய நிலையில், கடந்த ஜூன் 26ஆம் தேதி விண்வெளி நிலையத்தில் வெற்றிகரமாக விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.
18 நாட்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்கி ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு கடந்த ஜூலை 14ஆம் தேது இந்திய நேரப்படி மாலை 4:35 மணிக்கு விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் மூலம் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் பத்திரமாக பூமி வந்தனர். அதனை தொடர்ந்து அமெரிக்காவில் தங்கி பல்வேறு மருத்துவ சிகிச்சைப் பெற்று வந்த சுபான்ஷு, கடந்த 17ஆம் தேதி காலை இந்தியா வந்தார். விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு சாதனை படைத்த சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் குறித்து சிறப்பு விவாதம் நடத்தி அவரை கெளரவிக்க வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியது. ஆனால், நேற்று (18-08-25) காலை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவையில் வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அவையில் கோஷங்களை எழுப்ப தொடங்கினர்.
அப்போது அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுந்து நின்று பேசத் தொடங்கினார். ஆனால், எதிர்க்கட்சி எம்.பிக்கள் அவையின் முன்பு கூடி பதாகைகளை மேலும் மேலும் உயர்த்தி தொலைக்காட்சித் திரையில் அவரது பார்வையைத் தடுக்க முயன்றனர். அப்போது ஜிதேந்திர சிங், “நான் இப்போது விண்வெளியில் நிற்கிறேன். நீங்கள் என்னை அடைய முடியாது” என்று நகைச்சுவையாகக் கூறினார். இதனால், அவையில் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து பேசிய ஜிதேந்திர சிங், “நான் தொடங்கிய விவாதத்தில் பங்கேற்க நீங்கள் மிகவும் கோபமாக இருக்கலாம். இருந்தாலும் நான் இன்னும் தலை குனிந்து கெஞ்சுகிறேன். நீங்கள் அரசாங்கத்தின் மீது கோபமாக இருந்தாலும், தேசத்திற்குச் செல்லும் செய்தி சரியாக இருக்க விண்வெளி குறித்த இந்த முக்கியமாக விவாதத்தில் முன்வந்து பங்கேற்க வேண்டும். இந்த பிரிவினைக்கான காரணத்தை நான் யாரிடத்தில் சொல்வது? நீங்கள் என் மீது வருத்தமாக இருந்தாலும், உலகத்திற்காக வாருங்கள். நீங்கள் என் மீது வருத்தமாக இருந்தாலும் சுபான்ஷு சுக்லாவுக்காக வாருங்கள்” என்று கூறினார். இருப்பினும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் சுபான்ஷு சுக்லா குறித்து சிறப்பு விவாதம் நடத்தப்படாமல் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.