இந்தியாவுக்கு எதிராக ஏதேனும் தாக்குதல் நடத்த முயன்றால் பாகிஸ்தானுக்கு கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

Advertisment

ராஜஸ்தான் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜெய்சால்மர் போர் நினைவுச் சின்னத்தில் அஞ்சலி செலுத்தினார். அந்த நிகழ்ச்சியில், ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, பாதுகாப்புச் செயலாளர் ராஜேஷ் குமார் சிங், ராணுவத் துணைத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் புஷ்பேந்திர சிங், அனைத்து ராணுவத் தளபதிகள் மற்றும் இந்திய ராணுவத்தின் பிற மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisment

அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ வீரர்கள் முன்னிலையில் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, “இந்தியா மீது பாகிஸ்தான் ஏதேனும் தாக்குதல் நடத்த முயன்றால் கடுமையான பதிலடி கொடுக்கப்படும். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியடையவில்லை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எந்தவொரு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு பாகிஸ்தான் இருமுறை யோசிக்கும். ஆயுதப்படைகள் பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை அளவு கொடுத்துள்ளது. பதிலடி தாக்குதல்கள் நாட்டின் உண்மையான சக்தியைக் காட்டும் ஒரு நிரூபணம் மட்டுமே.

நாட்டின் எதிரிகள் ஒருபோதும் செயலற்றவர்கள் அல்ல. ஆயுதப்படைகள் எப்போதும் விழிப்புடனும், அவர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக தயாராகவும் இருக்க வேண்டும். 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த மற்றும் தன்னிறைவு பெற்ற நாடாக மாற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் ஆயுதப்படைகள் பங்கு வகிக்க வேண்டும்.

Advertisment

நமது வீரர்கள் எல்லைகளை பாதுகாப்பவர்கள் மட்டுமல்ல, தேசத்தைக் கட்டியெழுப்பும் முன்னோடிகளும் ஆவர். இந்த நூற்றாண்டு நம்முடையது, எதிர்காலம் நம்முடையது. நாம் சுயசார்பு நோக்கி மேற்கொண்டுள்ள முன்னேற்றங்களுடன் நமது ராணுவம் சந்தேகத்திற்கு இடமின்றி உலகின் சிறந்த ராணுவமாக மாறும் என்று நான் நம்புகிறேன். பாதுகாப்பு தயார்நிலையை மேலும் மேம்படுத்த எல்லை முழுவதும் வளர்ச்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று கூறினார்.