“தாக்கங்களை ஆராய்ந்து வருகிறோம்” - டிரம்ப்பின் 26% வரி விதிப்பு குறித்து மத்திய அமைச்சர் விளக்கம்!

trumpgoyal

Union Minister piyush goyal explains on Trump's tax imposition

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு ஆகஸ்ட் 1 முதல் 25% வரி விதிக்கப்படுவதாக நேற்று (30-07-25) மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.  இது குறித்து தனது தளமான ட்ரூத் சோசியலில் அவர் தெரிவித்ததாவது, ‘நினைவில் கொள்ளுங்கள், இந்தியா எங்கள் நண்பராக இருந்தாலும் பல ஆண்டுகளாக நாங்கள் அவர்களுடன் ஒப்பீட்டளவில் சிறிய வியாபாரத்தைச் செய்துள்ளோம். ஏனென்றால், அவர்களின் வரிகள் மிக அதிகமாக உள்ளன. உலகிலேயே மிக உயர்ந்தவைகளில் ஒன்றாகும். மேலும் அவை எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மிகவும் கடுமையான மற்றும் அருவருப்பான நாணயமற்ற வர்த்தக தடைகளைக் கொண்டுள்ளன. அவர்கள் எப்போதும் தங்கள் ராணுவ உபகரணங்களில் பெரும்பகுதியை ரஷ்யாவிடம் இருந்து வாங்கியுள்ளனர். மேலும் சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி வாங்குபவர்களில் ஒருவராக உள்ளனர். உக்ரைனில் நடக்கும் கொலைகளை ரஷ்யா நிறுத்த வேண்டும் என்று எல்லோரும் விரும்பும் நேரத்தில் இது எல்லாம் நல்லதல்ல. எனவே, ஆகஸ்ட் 1 முதல் இந்தியா 25% வரி கட்டணத்தையும் அபராதத்தையும் செலுத்தும். இந்தியாவுடன் நமக்கு மிகப்பெரிய வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது’ எனப் பதிவிட்டிருந்தார். டொனால்ட் டிரம்ப்பின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கடந்த 3 நாட்களாக நடந்த ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான தாக்குதல் நிறுத்தத்தின் டிரம்ப் பேச்சு குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர். ஆனால், பிரதமர் மோடி உள்பட மத்திய அமைச்சர்கள் ஒருவர் கூட அதற்கு பதிலளிக்கவில்லை. உலக தலைவர்கள் யாரும் இந்தியா - பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தவில்லை என மக்களவையில் பிரதமர் மோடி ஆணித்தரமாக பேசிய அடுத்த நாளே, தனது வேண்டுகோளின் பேரில் இந்தியா பாகிஸ்தானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவந்தது என டிரம்ப் 30வது முறை பேசி மீண்டும் பரப்பரப்பை கிளப்பினார். மேலும், இரு நாடுகளும் விரைவில் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யாவிட்டால், இந்திய இறக்குமதிகளுக்கு 25% வரி விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப் அறிவித்த வரி விதிப்பு நடவடிக்கை நாளை (01-08-25) அமலுக்கு வரவுள்ள நிலையில், இந்தியாவை டிரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார். தனது தளமான ட்ரூத் சோசியலில், ‘இந்தியா ரஷ்யாவுடன் என்ன செய்தாலும் எனக்கு கவலையில்லை. இரு நாடுகளின் பொருளாதாரமும் இறந்து போய்விட்டது. இரு நாடுகளும் தங்களின் இறந்த பொருளாதாராத்தை ஒன்றாக கொண்டு வர முடியும். நாங்கள் இந்தியாவுடன் மிகக் குறைந்த வணிகத்தைச் செய்துள்ளோம். அவற்றின் கட்டணங்கள் மிக அதிகம், உலகிலேயே மிக உயர்ந்தவை. அதே போல், ரஷ்யாவும் அமெரிக்காவும் இணைந்து எந்த வணிகத்தையும் செய்யவில்லை. அதை அப்படியே வைத்திருப்போம்’ என்று கடுமையாக தாக்கியுள்ளார். இந்தியாவை இறந்த பொருளாதாரம் என்று டிரம்ப் விமர்சித்து பேசியிருந்தது தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. இத்தகைய களேபரம் நடந்து வரும் நிலையில்ல் டிரம்ப் விதித்த அபராதத்துடன் கூடிய வரி விதிப்பு குறித்தோ, இந்தியாவை கடுமையாக விமர்சிப்பது குறித்தோ பிரதமர் நரேந்திர மோடி எந்தவித பதிலும் அளிக்காமல் அமைதி காத்து வருகிறார்.

டிரம்ப்பின் வரி விதிப்பு அறிவிப்பு குறித்து மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் விளக்கமளித்துள்ளார். மக்களவையிலும் அதன் பின்னர் மாநிலங்களவையிலும் பேசிய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல், “சமீபத்திய தாக்கங்களை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது. நிலைமையை மதிப்பிடுவது குறித்து கருத்துகளைப் பெறுவதற்காக வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஏற்றுமதியாளர்கள் மற்றும் தொழில்துறை உட்பட அனைத்து பங்குதாரர்களுடனும் ஈடுபட்டுள்ளது. நமது விவசாயிகள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர், ஏற்றுமதியாளர்கள், எம்எஸ்எம்இ-க்கள் (MSME) மற்றும் தொழில்துறையின் அனைத்துப் பிரிவுகளின் நலனைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. நமது தேசிய நலனைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். இந்தியா பலவீனமாக பொருளாதாரம் பட்டியலில் இருந்து உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

ஒரு தசாப்தத்திற்கும் மேலாக, இந்தியா உடையக்கூடிய ஐந்து நாடுகளில் ஒன்றாக இருந்து உலகின் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக வேகமாக மாறியுள்ளது. 11வது பெரிய பொருளாதாரத்தில் இருந்து முதல் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக நாம் உயர்ந்துள்ளோம். சில ஆண்டுகளில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவோம் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இன்று, சர்வதேச நிறுவனங்களும் பொருளாதார வல்லுநர்களும் இந்தியாவை உலகப் பொருளாதாரத்தில் பிரகாசமான இடமாகக் கருதுகின்றனர். உலக வளர்ச்சியில் இந்தியா கிட்டத்தட்ட 16% பங்களித்துள்ளத” என்று கூறினார். இந்தியாவை இறந்த பொருளாதாரம் என்று டிரம்ப் விமர்சித்ததற்கு பதிலளிக்கும் விதமாக பியூஷ் கோயல் விளக்கமளித்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது. 

America donald trump Piyush Goyal tariff
இதையும் படியுங்கள்
Subscribe