தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு கடந்த 21ஆம் தேதி (21.08.2025) மதுரை மாவட்டம் பாரபத்தி கிராமத்தில் நடைபெற்றது. சுமார் 2.5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்ற மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய்யின் பேச்சு தற்போது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. மேலும் இந்த கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். கையில் அதிமுக உள்ளது என அக்கட்சியின் தலைவர் விஜய் கூறியிருந்தார். இந்நிலையில் மத்திய தகவல், ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணை அமைச்சர் எல். முருகன் இன்று (27.08.2025) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய அமைச்சர் பதிலளித்து பேசுகையில், “ஆர்.எஸ்.எஸ். இயக்கமானது மிகப்பெரிய ஒரு இயக்கம். தொடர்ந்து 100 ஆண்டு கள் கொண்டிருக்கின்ற மிகப்பெரிய ஒரு சமூக சேவைக்கான இயக்கம். அந்த இயக்கத்தினுடைய செயல்பாடுகளை பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில் கூட சுட்டிக்காட்டி இருக்கிறார். அதேபோல அந்த இயக்கத்தினுடைய சிறப்பை பற்றி ஜவகர்லால் நேரு சொல்லியிருக்கிறார். அம்பேத்கர் நேரடியாக அந்த இயக்கத்தினுடைய முகாமில் கலந்துகொண்டு அந்த இயக்கத்தை பற்றி புகழ்ந்திருக்கிறார். சமூக மாற்றத்திற்காக சமூகத்தில் நல்லது செய்கிறது.
சென்னையில் சுனாமி வந்தப்போதும், ஒவ்வொரு முறையும் வெள்ளம் வரும் போதும், கொரோனா நேரமாகட்டும் அங்கே முதல் களப்பணியாளர்களாய் நின்று பணி செய்வது ஆர்.எஸ்.எஸ்.னுடைய தன்னார்வலர்கள் தான். அப்படிப்பட்ட இயக்கத்தினுடைய கருத்துக்களை ஒருத்தர் கேட்பது என்பது மிகவும் வரவேற்கத்தக்கது தானே? எனவே ஆர்.எஸ்.எஸ். கருத்தை அதிமுக கேட்பது வரவேற்கத்தக்கது தானே?. இதில் என்ன இருக்கப் போகிறது என்னவென்றால் சுதந்திரமான ஒரு அமைப்பு நூறு ஆண்டுகளைக் கொண்டிருக்கின்ற ஒரு சேவைக்கான அமைப்பு. வழிநடத்துவதில் என்ன தவறு இருக்கிறது?. விஜய் திருந்திக்க வேண்டும். விஜய் ஆர்.எஸ்.எஸ்.ஸைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்” எனப் பேசினார்.