பாஜகவுக்கு பதிலளிக்க திராணி இல்லாத முதல்வர் மீண்டும் கச்சத்தீவு விவகாரத்தை எழுப்புவது ஏன்?. தமிழக மீனவர்களின் ஒரே நண்பன் மத்திய பாஜக அரசு மட்டுமே. மணிப்பூருக்கு நீலி கண்ணீர் வடிக்கும் கபட வேஷதாரிகளுக்கு மக்கள் பாடம் புகட்டப்போவது நிச்சயம் என மத்திய இணை அமைச்சர் எல். முருகன்  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராமநாதபுரத்தில் தமிழக அரசு சார்பில் நடந்த விழாவில் பங்கேற்று பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கச்சத்தீவு விவகாரத்தை எழுப்பியுள்ளார். மத்திய அரசு மீது பல புகார்களையும் கூறியுள்ளார். மீண்டும் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வருக்கு நான் பலமுறை பதிலளித்து விட்டேன். 

Advertisment

நான் உட்பட பாஜக தலைவர்கள் எழுப்பிய கேள்விக்கு இதுவரை அவரிடம் இருந்து பதில் இல்லை. பாஜக.வினரின் கேள்விக்கு பதிலளிக்க திராணியற்ற  மு.க.ஸ்டாலின், அதே பல்லவியை மீண்டும் மீண்டும் பாடி வருவது நகைப்பிற்கு உரியது. ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் பேசினால் தங்கள் மீதுள்ள தவறுகளை மக்கள் மறந்து விடுவர் என்று அவர் கனவு காண்கிறார். ஆனால், அது ஒருபோதும் நடக்கப்போவதில்லை. கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது யார்?. அப்போது மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தவர்கள் யார்?. சொந்த அரசியல் காரணங்களுக்காக அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் கட்சியும், அப்போதைய திமுக தலைவர் கலைஞரும் கபட நாடகம் நடத்தி, தமிழக மக்களிடம் எவ்வித கருத்தும் கூட கேட்காமல் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தனர். 

Advertisment

mks-5

அப்போதே இதைக் கடுமையாக எதிர்த்த கட்சி பாஜக. முன்னாள் பிரதமர் வாஜ்பாய், 1974-ம் ஆண்டு தற்போதைய பாஜகவின் முந்தைய கட்சியான ஜனசங்கத்தின் தலைவராக எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்று பேசியுள்ளார். கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் அரசு இந்தியாவிற்கு துரோகம் இழைப்பதை தகுந்த ஆதாரத்துடன் சுட்டி காட்டியுள்ளார். அவரது எதிர்ப்பையும் காங்கிரஸ் - திமுக அரசுகள் புறந்தள்ளிவிட்டன. மற்றொரு ஒப்பந்தத்தில் இந்திய மீனவர்களின் உரிமைகளையும் இவர்கள் இலங்கை அரசிடம் பறிகொடுத்து விட்டனர். அதன் பிறகு கச்சத்தீவு என்று ஒன்று இருப்பதையும், அதனை இலங்கைக்கு தாரை வார்த்ததையும் காங்கிரஸ் மற்றும் திமுகவினர் மறந்து விட்டனர். 2004 முதல் 2014 வரை மத்தியில் 10 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து அதிகாரத்தை சுவைத்த திமுகவுக்கு கச்சத்தீவு விவகாரம் ஞாபகத்திற்கு வரவில்லை. மீனவர்களின் துன்பமும் தெரியவில்லை.

தந்தை செய்த தவறை மறைத்து விட்டு, மகன் தற்போது இராமநாதபுரம் சென்று மீனவர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார். கச்சத்தீவு விஷயத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி செய்துள்ள துரோகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். கச்சத்தீவை தாரை வார்த்த அதே காங்கிரஸ் கட்சியுடன் வெட்கமில்லாமல் இன்றும் கூட்டணி வைத்து குலாவிக் கொண்டிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு மீனவர்களின் நலன் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. தமிழக மீனவர் சமூகத்திற்கு யாரும் செய்ய துணியாத துரோகத்தை செய்த திமுகவினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் மத்திய அரசை கேள்வி கேட்கும் தார்மீக உரிமை இல்லை. மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, மீனவர்கள் மீதான தாக்குதல் குறைந்துள்ளதுடன், இலங்கை அரசு கைது செய்த மீனவர்கள் உடனடியாக தமிழகத்திற்கு மீட்டு வரப்பட்டுள்ளனர். 

Advertisment

boat

இலங்கை நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை, மரணத்தின் பிடியிலிருந்து மீட்டு வந்த பெருமை நமது பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி ஜி அவர்களையே சாரும். இந்த சாதனைகளை செய்தது பாஜக அரசுதான் என்பதை மறைத்து விட்டு, மீனவர்களுக்கு பாஜக என்ன செய்தது என்று கேள்வி கேட்டால் திமுகவின் தவறு மறைந்து போய் விடுமா? மக்கள் தான் மறந்து விடுவார்களா?. கச்சதீவை மீட்கவும், இழந்த தமிழக மீனவர்களின் உரிமையை நிலைநாட்டவும் பாஜக அரசு மட்டுமே நடவடிக்கை எடுக்கும். இலங்கையில் தமிழ் உறவுகள் கொத்து கொத்தாக கொல்லப்பட்டபோது கூட வேடிக்கை பார்த்த காங்கிரஸ் - திமுகவினரால் தமிழகத்தின் உரிமையை எப்படி நிலைநாட்ட முடியும்?. 

இதுபோலவே, கரூர் அப்பாவி மக்கள் பலியான விவகாரத்திலும் பாஜகவை கேள்வி கேட்க, முதல்வருக்கு தார்மீக உரிமை இல்லை. சொந்த மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத ஒரு முதல்வர், மணிப்பூர் பிரச்சனையைப் பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சியில், காவலர்களே இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் கொடூரம் அரங்கேறி வருகிறது. தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம், பெருகிப் போன போதைப் பொருட்கள் வியாபாரம் என திமுக ஆட்சியில் அமைதியான தமிழகத்தின் அடையாளமே மாறிப்போய் விட்டது. இதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர்  மு.க.ஸ்டாலின், மணிப்பூர் பற்றி பேசுவதை பார்த்து தமிழக மக்கள் கொதித்துப் போயுள்ளனர். 

தமிழகத்தில் காவல்துறை செயல்படுகிறதா என்ற அச்சத்துடன் மக்கள் நாட்களை நகர்த்தி வருகின்றனர். ஆனால் முதல்வரோ மணிப்பூர் நிலைமை பற்றி கேள்வி கேட்கிறார். காசா-விற்காக கண்ணீர் வடிக்கிறார்."சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே... செம்மை மறந்தாரடி""நெஞ்சில் உரமும் இன்றி நேர்மைத் திறமும் இன்றி வஞ்சனை சொல்வாரடி கிளியே... வாய்ச் சொல்லில் வீரரடி கிளியே..." இதுபோன்றவர்களைப் பற்றி மகாகவி பல ஆண்டுகளுக்கு முன்பே பாடி விட்டார். சொந்த மக்களை காப்பாற்ற முடியாத இந்த கபட வேஷதாரிகளுக்கு, வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவர்” எனத் தெரிவித்துள்ளார்.