“தமிழகத்தில் வளம்கொழிக்கும் தொழிலாக விளங்குவது சாராய ஆலைகள் மட்டும் தான்” - மத்திய அமைச்சர் எல்.முருகன்!

l-murugan

4 ஆண்டுகளுக்கும் மேலாக திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?. முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டு பயணத்தால் என்ன பயன்? என மத்திய தகவல், ஒளிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறையின் இணை அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.  இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ராக்கெட் ஏவுதளம், விமான நிலைய விரிவாக்கம் என தென் மாவட்ட வளர்ச்சியில் கவனம் செலுத்தும் மத்திய அரசு. திமுக அரசின் வெற்று விளம்பர அரசியலை தென் மாவட்ட  மக்கள் நம்பப் போவதில்லை.

தூத்துக்குடி மாவட்டம் , தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம், தூத்துக்குடி துறைமுகத்தில் மேம்பாட்டு பணிகள், எளிமையான சரக்கு போக்குவரத்து வசதிக்கென தேசிய நெடுஞ்சாலைகள், சரக்கு போக்குவரத்துக்காக ரயில் திட்டங்கள் என தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு பல்வேறு பணிகளை மத்திய அரசு முனைப்புடன் தொடர்ந்து செய்து வருகிறது. ஆனால், தமிழக அரசு மத்திய அரசின் திட்டங்களுக்கு தங்கள் பெயரில் ஸ்டிக்கர் மட்டுமே ஒட்டிக் கொண்டிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் எத்தனையோ முதலீட்டாளர்கள் மாநாடு, முதலீட்டாளர்கள் சந்திப்புகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்தி விட்டார். ஆனால், இதுவரை தமிழகத்திற்கு கிடைத்தது என்ன?. 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக தமிழகத்தை மாற்றுவேன் என சூளுரைத்தால் போதுமா?. 

நாங்குநேரி தொழிற்பேட்டை, விருதுநகர் ஜவுளி பூங்கா, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் என பல மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட தொழில் மேம்பாட்டு திட்டங்கள் எல்லாம் வெற்று அறிவிப்பாகவே உள்ளன. அவற்றின் நிலை என்னவென்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களுக்கு அறிவிப்பாரா?. தமிழகத்தில் இன்று வளம்கொழிக்கும் தொழிலாக விளங்குவது சாராய ஆலைகள் மட்டும் தான். இதன் மூலம் திமுகவினர் உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற போட்டா போட்டியிடுகின்றனர். சொந்த குடும்பங்கள் வளம்பெற ஆட்சி நடத்தும் திமுகவினரிடம் தமிழகத்தின் நலனை எப்படி எதிர்பார்க்க முடியும். 

எனவே தமிழகத்தில் இதுவரை ஈர்க்கப்பட்ட முதலீடுகள் எவ்வளவு, புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு  எந்தெந்த நிறுவனங்கள் தொழிற்சாலையைத் தொடங்கி உள்ளன?. அதன் தற்போதைய நிலை என்ன? முதலீடு மாநாடு நடத்தி கிடைத்த பயன் என்ன? இவற்றையெல்லாம் தமிழக மக்களுக்கு திமுக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தமிழகத்துக்கு வந்த முதலீடுகள் குறித்து மக்களுக்குத் தெரியும் வகையில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். அப்பொழுதுதான் எந்தெந்த நிறுவனங்கள் தமிழகத்தில் வந்துள்ளன, தமிழகத்தின் உண்மையான நிலவரம் என்னவென்பதை மக்கள் அறிந்து கொள்ள முடியும். இல்லையெனில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும்,அவரது அமைச்சர்களும் அள்ளி விடும் அறிவிப்புகள் வெறும் வெற்று விளம்பர அறிவிப்புகள் மட்டுமே என்பது உறுதியாகும்” எனத் தெரிவித்துள்ளார். 

l murugan mk stalin Tamilnadu tn govt
இதையும் படியுங்கள்
Subscribe