நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், பஹல்காம் தாக்குதல், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பேச்சு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலுமே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதில், கடந்த ஜூலை 28ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்டோர் பேசினர். இதனையடுத்து, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் எம்.பிக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து நாடாளுமன்ற வளாகத்தில் ஒவ்வொரு நாளும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால், ஒரு சுயாதீன அமைப்பான தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்காளர் திருத்த நடவடிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்க முடியாது என எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கெனவே நிராகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பிக்கள் இரு அவைகளிலும் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், எந்தவித மசோதாக்களும் நிறைவேற்றப்படாமல் நாடாளுமன்றம் முடங்கியுள்ளது.
இந்த நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால் விவாதம் இல்லாமலேயே மசோதாக்களை நிறைவேற்றுவோம் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கிரண் ரிஜிஜு, “தேர்தல் ஆணையம் போன்ற அரசியலமைப்பு அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று முன்னாள் சபாநாயகர் பல்ராம் ஜாக்கரின் தீர்ப்பு உள்ளது. இந்த முன்னுதாரணத்தின் அடிப்படையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஏற்கனவே எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார். நாடாளுமன்றம் தேர்தல் சீர்திருத்தங்களைப் பற்றி விவாதிக்கலாம். ஆனால் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளைப் பற்றி அல்ல விவாதிக்க முடியாது. தேர்தல் கண்காணிப்பு அமைப்பு முன்னதாகவே சிறப்பு தீவிர திருத்தத்தை செயல்படுத்தியுள்ளது.
தேசிய விளையாட்டு நிர்வாக மசோதா மற்றும் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு மசோதா ஆகிய இரண்டு நாள் விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் ஒப்புகொண்டனர். இவை இரண்டும் நேற்று (04-08-25) மக்களவையில் பரிசீலனை மற்றும் நிறைவேற்றத்திற்கு ஒன்றாக எடுத்துக் கொள்ள திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால், இதில் இருந்து பின்வாங்கி சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என அமளியில் ஈடுபட்டனர். சட்டங்களை உருவாக்குவதும், மசோதாக்களை நிறைவேற்றுவதும் தான் நாடாளுமன்றத்தின் வேலை. மசோதாக்கள் குறித்து நாடாளுமன்றத்தில் முழுமையான விவாதம் நடத்த வேண்டும் என மத்திய அரசு விரும்புகிறது. விவாதம் நடத்தப்படாமல் மசோதாக்கள் நிறைவேற்றப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால், அந்த நிலைக்கு எங்களை கட்டாயப்படுத்தக்கூடாது” என்று கூறினார்.