பீகார் தேர்தல் பரப்புரையின் போது முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை என மத்திய அமைச்சர் ஒருவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பீகார் மாநிலத்தில், நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அம்மாநில சட்டசபையின் பதவிக்காலம் வரும் நவம்பர் 22 ஆம் தேதியுடன் நிறைவு பெறுவதையடுத்து, அம்மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று, நவம்பர் 14ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

Advertisment

மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகாரில், ஆளும் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி, தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம்-காங்கிரஸ் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி, தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இது தவிர, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரும் ஹைதராபாத் நாடாளுமன்ற உறுப்பினருமான அசாதுதீன் ஓவைசி இரண்டு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார். இதனால், பீகார் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.

அந்த வகையில் பீகாரின் அர்வால் மாவட்டத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில்  மத்திய ஜவுளித்துறை அமைச்சரும், பா.ஜ.க மூத்த தலைவருமான கிரிராஜ் சிங் பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “மத்திய அரசின் திட்டங்களைப் பற்றி ஒரு முஸ்லிமிடம் உரையாடினேன். அப்போது அவர் மத்திய அரசின் திட்டங்களால் பயனடைவதாகக் கூறினார். எனக்கு வாக்களித்தீர்களா என்று நான் அவரிடம் கேட்டபோது, ​​அவர் ஆம் என்று பதிலளித்தார், ஆனால் நான் கடவுள் மீது சத்தியம் செய்யச் சொன்னபோது, ​​அவர் மறுத்துவிட்டார். முஸ்லிம்கள் அனைத்து மத்திய திட்டங்களின் நன்மைகளையும் பெறுகிறார்கள், ஆனால் நமக்கு வாக்களிப்பதில்லை. அத்தகையவர்கள் ‘நமக் ஹராம்’ (நன்றியற்றவர்கள்) என்று அழைக்கப்படுகிறார்கள். நான் அவரிடம் நன்றியற்றவர்களின் வாக்குகளை விரும்பவில்லை என்று சொன்னேன்.

Advertisment

இலவச உணவை உட்கொள்வது ‘ஹராம்’ என்று இஸ்லாம் கூறுகிறது. அவர்கள் 5 கிலோ ரேஷனை இலவசமாக எடுத்துக் கொள்ளவில்லையா? இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பிரதம மந்திரி அவாஸ் கிடைக்கவில்லையா? இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் கழிப்பறை கிடைக்கவில்லையா? நல்-ஜல் யோஜனா, எரிவாயு சிலிண்டரில் ஏதேனும் பாகுபாடு இருந்ததா?. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்காகவும் செயல்படுகிறது, ஆனால் முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிப்பதைத் தவிர்க்கிறார்கள். தேர்தலில் வெற்றி பெற அவர்களின் வாக்குகள் எனக்குத் தேவையில்லை” என்று கூறினார். இவருடைய பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.