திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சுவாமிநாதன் கடந்த 1ஆம் தேதி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவைத் தொடர்ந்து, கார்த்திகை தீபத் திருநாளான கடந்த 3ஆம் தேதி, திருப்பரங்குன்றம் மலையின் உச்சியின் மீதுள்ள தீபத்தூணில் ஏற்றாமல் பிள்ளையார் கோயிலில் அருகில் கார்த்திகை தீபம் ஏற்றியதால் இந்து அமைப்பினர், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு போராட்டம் செய்தனர். இதல் இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவை ரத்து செய்யக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகர் காவல் ஆணையர் மற்றும் கோவில் நிர்வாக அதிகாரி ஆகியோர் தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு, நீதிபதிகள் ஜெயசந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். இன்று (31-12-25) மதுரைக்கு வந்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், அங்குள்ள மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “நாங்கள் இப்போது தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில், ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் பயிற்று மொழியாக இருக்க வேண்டும். இது தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரை. உள்ளூர் அரசு ஆரம்ப பள்ளிகளில் தமிழ் மொழியை ஊக்குவிக்கும் என்று நான் நம்புகிறேன். குழந்தைகளை நாம் கவனித்துக் கொண்டால், அவர்கள் நமது சமூகத்தின் எதிர்காலத் தலைவர்களாக இருப்பார்கள்” என்று கூறினார்.
இதையடுத்து அவரிடம் திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்து மக்கள் அங்கு தீபம் ஏற்றலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் போது, ​​அதை எதிர்ப்பது என்பது துரதிர்ஷ்டவசமானது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் நோக்கத்தோடு செயல்படுகிறது. திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. ராமனின் இருப்பை உங்களால் மறுக்க முடியுமா? மீனாட்சி அம்மனின் இருப்பை உங்களால் மறுக்க முடியுமா? தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தின் கலாச்சார நெறிமுறைகளை உங்களால் நீக்க முடியுமா? சமூகத்தில் இருந்து திருக்குறளை நீக்க முடியுமா? அது போல தான் திருப்பரங்குன்றமும். அவர்கள் தவறான கருத்தை பரப்புகிறார்கள். அவர்கள் முட்டாள், அவர்கள் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறார்கள். அவர்களை இறைவன் சிவப்பெருமான் மன்னிக்கட்டும்” என்று கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/31/dharmen-2025-12-31-11-55-02.jpg)