பீகார் மாநிலத்தில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஜனதா தளம் -பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பிற கட்சிகள் உள்ளன. இம்மாநிலத்தில் இந்தாண்டு இறுதிக்குள் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தேர்தலுக்காக, அரசியல் கட்சித் தலைவர்கள் தற்போதில் இருந்தே ஆயுத்தமாகி வருகின்றனர். இதனிடையே, பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கையை மேற்கொண்டு அம்மாநிலத்தில் 65 லட்ச வாக்காளர்களின் பெயர்களை இந்திய தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், நிதிஷ் குமார் தலைமையிலான அரசை மத்திய அமைச்சர் ஒருவர் கடுமையாக தாக்கிப் பேசியிருப்பது கூட்டணி கட்சிக்களுக்குல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சர் ஷிராஜ் பஸ்வான் இன்று (26-07-25) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “பீகாரில் கொலை, கொள்ளை, கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாநிலம் முழுவதும் குற்றங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால், நிர்வாகம் நிலைமையை கட்டுப்படுத்தத் தவறிவிட்டது. நிர்வாகம் குற்றவாளிகளுக்கு முன்பாக முழுவதும் கீழ்படிந்துள்ளது. மாநிலத்தில் நிகழும் குற்றங்களை கட்டுப்படுத்தாத ஒரு ஆட்சியை ஆதரிப்பது வருத்தமளிக்கிறது. குற்றங்களை கட்டுப்படுத்த தவறிய அரசாங்கத்தை ஆதரவளிப்பதற்கு வெட்கமாக இருக்கிறது.

பீகார் மக்கள் பாதுகாப்பாக உணரவில்லை. குற்றச் செயல்கள் ஏன் குறையவில்லை? நிர்வாகம் அவர்களைத் தடுக்கத் தவறிவிட்டது போல் தெரிகிறது. நிலைமையை அரசாங்கம் மறைக்க முயற்சிக்கிறது. மேலும் அதை கையாள முடியாமல் இருக்கிறது. அரசாங்கம் சரியான நேரத்தில் விழித்தெழுவது அவசியம். விரைவில் பீகார் திரும்புவதற்கான எனது விருப்பத்தை கட்சியிடம் தெரிவித்துள்ளேன். பீகார் மாநிலத் தேர்தலில் நான் பங்கேற்பது கட்சியை வலுப்படுத்துமா இல்லையா என்பது பொறுத்து இறுதி முடிவு இருக்கும். எனது பார்வை முதலில் பீகார், பீகாரி என்பது தான் இருக்கும். பீகாரை வளர்ந்த மாநிலங்களுக்கு இணையாக பார்க்க விரும்புகிறேன். மூன்றாவது முறையாவ்க நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய பிறகு, டெல்லியில் தங்கி அந்த இலக்கை அடைய முடியாது என்பதை உணர்ந்துள்ளேன்.சமீபத்திய மக்களவைத் தேர்தலில் எனது கட்சி 100% வெற்றி விகிதத்தைப் பெற்றது. மாநில சட்டமன்றத் தேர்தலிலும் அதையே செய்ய விரும்புகிறேன்” என்று கூறினார்.

நாட்டிலேயே அதிக அளவில் குற்றங்கள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் பீகாரும் ஒன்றாக இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆம்புலன்ஸிலேயே காத்திருக்க வைத்ததால் பாலியல் வன்கொடுமை ஆளாகி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பட்டியலின சிறுமி உயிரிழந்த சம்பவம் பீகாரில் அதிர்வலையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.