தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கான நிதியை விரைந்து வழங்கிட வேண்டும். முக்கியமான திட்டங்களை மீண்டும் தொடங்கிட வேண்டும். தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக புதிய இரயில்வே திட்டங்களை அனுமதித்திட வேண்டும். ரயில்வே அமைச்சகத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறு கோரி, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (08.02.2026) கடிதம் எழுதியிருந்தனர்.
அதில், “நிலக் கையகப்படுத்தல் பணிகள் 94% நிறைவடைந்து, நடைபெற்று வரும் 19 ரயில்வே திட்டங்களுக்கு நிலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட பின்னரும், 931.52.96 ஹெக்டேர் நிலத்துக்கான நிதி இன்னும் வழங்கப்படவில்லை. நிலக் கையகப்படுத்தலும் இழப்பீடு வழங்கலும் நிறைவு பெற, நிதியை முழுமையாகவும் முன்னுரிமையுடனும் விடுவிக்க வேண்டும். பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தூத்துக்குடி-மதுரை (அருப்புக்கோட்டை வழியாக) மற்றும் திண்டிவனம்-திருவண்ணாமலை அகல ரயில்பாதை திட்டங்களை மீண்டும் தொடங்க வேண்டும்
தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய இரயில்வே திட்டங்களை அனுமதிக்க வேண்டும். நாட்டின் ஜி.டி.பி. மற்றும் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்த இரயில் இணைப்பை மேம்படுத்துவது அவசியம்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இது தொடர்பாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம் அளித்துள்ளர். இது குறித்து அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு இந்திய அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல், மாநிலத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு 8.5 மடங்குக்கும் அதிகமாக அதிகரித்து, 2026–27 ஆம் ஆண்டில் ₹7,611 கோடியை எட்டியுள்ளது.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/09/modi-mks-2026-02-09-12-22-38.jpg)
இருப்பினும், தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாமல் வளர்ச்சியை முன்னெடுக்க முடியாது. தற்போது நடைபெற்று வரும் ரயில்வே திட்டங்களுக்கு, தேவைப்படும் 4,326 ஹெக்டேர் நிலத்தில் 1,052 ஹெக்டேர் (அதாவது 24% மட்டுமே) நிலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதற்காகத் தமிழக அரசுக்கு ஏற்கனவே ₹1,465 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாநில அரசு நிலம் கையகப்படுத்துவதில் நிலவும் தாமதத்தால் பல முக்கியமான திட்டங்கள் முடங்கியுள்ளன. நிதிப் பற்றாக்குறையினால் திட்டங்கள் முடங்கவில்லை; அத்தகைய கூற்றுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. நிலம் கையகப்படுத்துவதே பல திட்டங்களில் பெரும் சிக்கலாக உள்ளது.
எடுத்துக்காட்டாக, மதுரை – (அருப்புக்கோட்டை வழியாக) தூத்துக்குடி (144 கி.மீ) புதிய ரயில் பாதை திட்டத்திற்கு 91% நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது. திண்டிவனம் – செஞ்சி – திருவண்ணாமலை (71.33 கி.மீ) புதிய ரயில் பாதை திட்டத்திற்கு 86% நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது.ராமேஸ்வரம் - தனுஷ்கோடி புதிய ரயில் பாதை திட்டத்திற்கு 2019ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. உண்மை என்னவென்றால், தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், இத்திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்தும் பணி இன்னும் தொடங்கப்படவில்லை.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/09/train-2026-02-09-12-23-00.jpg)
இந்த சவால்களுக்கு மத்தியிலும், மத்திய அரசு பல புதிய பாதைகள், இருவழிப் பாதைகள் மற்றும் 3வது மற்றும் 4வது பாதைகளுக்கு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தின் பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியை ஆதரிக்கும் வகையில், கூடுதல் திறன் விரிவாக்கத்திற்கான விரிவான திட்ட அறிக்கைகள் (DPR) தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 77 'அம்ரித்' நிலையங்கள் முழுமையான மறுசீரமைப்பிற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 18 நிலையங்களில் பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. 2014ஆம் ஆண்டு முதல், சுமார் 1,350 கி.மீ தொலைவிற்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ரயில்வே 97% மின்மயமாக்கலை எட்டியுள்ளது.
கடந்த 2014ஆன் ஆண்டு முதல் 2,386 கி.மீ ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன. 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தின் கீழ் உருவான நவீன ரயில்கள் தமிழக மக்களுக்கு மேம்பட்ட மற்றும் மலிவான பயணத்தை உறுதி செய்கின்றன. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பொறுத்தவரையில் தற்போது 9 (ஜோடி) ரயில்கள் இயக்கப்படுகின்றன. அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களை பொறுத்தவரையில் தற்போது 9 ஜோடி ரயில்கள் இயக்கப்படுகின்றன. மத்திய அரசு ரயில்வே திட்டங்களை மேற்கொள்ள தயாராகவும் உறுதியுடனும் உள்ளது. தமிழக மக்களுக்கு விரைவான உள்கட்டமைப்பு வளர்ச்சியை வழங்க மாநில அரசின் சரியான நேரத்திலான ஆதரவு அவசியமாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us