தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

இத்தகைய சூழலில் தான் தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தனது ‘தமிழ்நாடு தலைநிமிரத் தமிழனின் பயணம்’ என்ற பிரசாத்தின் இறுதி நாளன்று பாஜக தேசியத் தலைமையிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இவர்களில் ஒருவர் கலந்துகொள்வார்கள் எனக் கூறியிருந்தார். அதனை உறுதிப்படுத்தும் விதமாக மத்திய அமைச்சர் அமித்ஷா இந்த விழாவில் கலந்து கொள்ள உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Advertisment

இதற்காக, ஜனவரி 4ஆம்  தேதி அன்று மத்திய அமைச்சர் அமித்ஷா அந்தமானிலிருந்து தனி விமானம் மூலம் மதியம் மூன்று மணியளவில் திருச்சி விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்குக் கிளம்புகிறார். இதனையடுத்து  நயினார் நாகேந்திரனின் தேர்தல் பரப்புரையின் இறுதி நாளன்று நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். இந்த பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு, மீண்டும் திருச்சிக்குச் சென்று அன்றிரவு அங்குள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்குகிறார். 

amitsh-vanakkam-tn

அடுத்த நாள் (ஜனவரி 5) அன்று காலையில் ஸ்ரீரங்கத்தில் ஏகாதசி விழா நடைபெற உள்ளதையொட்டி, கோயிலுக்குச் சென்று விழாவில் கலந்துகொள்கிறார். இந்த விழாவை முடித்துவிட்டு மீண்டும் திருச்சி விடுதியில் காலை 11 மணியளவில் பாஜகவின் முக்கியத் தலைவர்களுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இதனைத் தொடர்ந்து பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார். இந்த பொங்கல் விழா திருச்சி மன்னார்புரம் அருகேயுள்ள ராணுவ மைதானத்தில் நடைபெற இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய  அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வரும் அதே வாரத்தில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும்,  மத்திய அமைச்சருமான பியூஷ் கோயலும் மீண்டும் தமிழகம் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisment