மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆபரேஷன் சிந்தூர் மற்றும் ஆபரேஷன் மகாதேவ் குறித்து இன்று (29.07.2025) மக்களவையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நான் சந்தித்தேன். அப்போது திருமணமான 6 நாட்களுக்குப் பிறகு விதவையான ஒரு பெண் என் முன் நிற்பதைக் கண்டேன். அந்தக் காட்சியை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. பயங்கரவாதிகளை அனுப்பியவர்களை பிரதமர் மோடி செயலிழக்கச் செய்தார். கொலைகளைச் செய்தவர்களை நமது பாதுகாப்புப் படையினர் கொன்றனர் என்பதை இன்று அனைத்து குடும்பங்களுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன்.
பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களை தேசிய புலனாய்வு நிறுவனம் (NIA -National Investigation Agency)ஏற்கனவே கைது செய்திருந்தது. அவர்களுக்கு உணவளித்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். பயங்கரவாதிகளின் இறந்த உடல்கள் ஸ்ரீநகர் கொண்டு வரப்பட்ச்டது. அப்போது, அவர்கள் பஹல்காமில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய 3 பேர் என அடையாளம் காணப்பட்டனர். பயங்கரவாத தாக்குதலில் கைப்பற்றப்பட்ட தோட்டாக்களின் தடய அறிவியல் ஆய்வகத்தின் (FSL - Forensic Science Laboratory) அறிக்கை ஏற்கனவே தயாராக இருந்தது. நேற்று, 3 பயங்கரவாதிகளின் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு, தடய அறிவியல் ஆய்வகத்தின் அறிக்கைகளுடன் ஒப்பிடப்பட்டன. மேலும் நேற்று சண்டிகரில் சோதனைகள் நடத்தப்பட்டன. அதன் பிறகு இந்த மூவரும் பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.
நேற்று அவர்கள் (காங்கிரஸ்) ‘பயங்கரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள்’ அதற்கு யார் பொறுப்பு என்று எங்களிடம் கேட்டார்கள். நிச்சயமாக, நாங்கள் அதிகாரத்தில் இருப்பதால் அது எங்கள் பொறுப்பு. நேற்று, முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரம், ‘பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்து வந்தார்கள் என்பதற்கான ஆதாரம் என்ன?’ என்ற கேள்வியை எழுப்பினார். பாகிஸ்தானைக் காப்பாற்றுவதன் மூலம் அவருக்கு என்ன கிடைக்கும் என்று நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன்.
ஆபரேஷன் சிந்தூர் பயங்கரவாதிகளை அனுப்பியவர்களைக் கொன்றது. ஆபரேஷன் மகாதேவ் தாக்குதலை நடத்தியவர்களைக் கொன்றது. பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் கூட்டம் (CCS - Cabinet Committee on Security) ஏப்ரல் 30 ஆம் தேதி நடந்தது. அதில் பாதுகாப்புப் படையினருக்கு முழுமையான செயல்பாட்டு சுதந்திரம் வழங்கப்பட்டது. மே 7 ஆம் தேதி சிந்தூர் நடவடிக்கை தொடங்கப்பட்டு அதிகாலை 01:04 மணி முதல் 01:24 மணி வரை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையில், பாகிஸ்தானில் 9 பயங்கரவாத தளங்கள் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலில் பாகிஸ்தான் பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை. சிந்தூர் நடவடிக்கையின் போது நமது பாதுகாப்புப் படையினர் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை வீழ்த்தினர்.
சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து, நமது சுய பாதுகாப்பு உரிமையின்படி, இந்தியா அவர்களின் நிலத்தில் பயங்கரவாத உள்கட்டமைப்பைத் தாக்கியதாக நமது டி.ஜி.எம்.ஓ. (DGMO - senior officials of Indian Army) பாகிஸ்தான் டி.ஜி.எம்.ஓ.விடம் தெரிவித்தார். மன்மோகன் சிங் அரசாங்கத்தின் போது நடந்தது போல் பயங்கரவாதிகள் வந்து நம்மைக் கொல்வதும் நாம் அமைதியாக அமர்ந்திருப்பதும் நடக்காது. காங்கிரஸ் அரசாங்கத்தின் கீழ் இந்தியாவை இரத்தம் சிந்திய பயங்கரவாதிகளை நாங்கள் கொன்றோம். நேற்று, கோகோய் ஏப்ரல் 24 அன்று மோடி ஜி பஹல்காமிற்குப் பதிலாக பீகாருக்குச் சென்றதாகக் கூறினார். பஹல்காம் தாக்குதல் நடந்த நேரத்தில், மோடி வெளிநாட்டில் இருந்தார். மோடி பீகார் சென்ற அன்று, ராகுல் காந்தி மட்டுமே பஹல்காமில் இருந்தார். வேறு யாரும் இல்லை. நாட்டு மக்கள் மீது இதுபோன்ற தாக்குதல் நடந்தால் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்பது பிரதமரின் கடமை” எனப் பேசினார்.