தமிழக பா.ஜ.க சார்பில் திருநெல்வேலியில் உள்ள தச்சநல்லூரில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் இன்று (22.08.2025) நடைபெற்றது. இதில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி மாநாடு, தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருநெல்வேலிக்கு வருகை தந்துள்ளார்.
இந்நிலையில் இந்த பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு உரையாற்றுகையில், “இந்தியா கூட்டணித் தலைவர்களால் தமிழ்நாட்டுக்கோ அல்லது நாட்டிற்கோ எந்த நன்மையும் செய்ய முடியாது. முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஒரே ஒரு திட்டம்தான் இருக்கிறது. அவருடைய மகனை (உதயநிதி ஸ்டாலின்) முதல்வராக்குவது. மேலும் சோனியா காந்திக்கும் ஒரே ஒரு திட்டம்தான் உள்ளது. அது அவரது மகனை (ராகுல் காந்தி) பிரதமராக்குவதுதான். ஆனால் நான் இருவருக்கும் சொல்ல விரும்புகிறேன், ராகுல் காந்தி பிரதமராகவோ, உதயநிதி முதலமைச்சராகவோ முடியாது. 2 இடங்களிலும் (மத்திய மற்றும் மாநிலத்தில்) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி நிச்சயம். மோடியின் வெற்றி நிச்சயம்.
பிரதமர் மோடி அரசியலமைப்பு (130வது திருத்தம்) மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். முழு எதிர்க்கட்சியும் அதை எதிர்த்தது. சிறையில் உள்ள முதலமைச்சர்கள் மற்றும் பிரதமர்களைப் பதவி நீக்கம் செய்ய இந்த மசோதா முன்மொழிகிறது. திமுக மூத்த தலைவர்களான பொன்முடி மற்றும் செந்தில் பாலாஜி ஆகியோர் ராஜினாமா செய்யாமல் எட்டு மாதங்கள் சிறையில் இருந்தனர். சிறையில் இருந்து கொண்டு ஒரு அரசாங்கத்தை நடத்த முடியுமா?. திமுக உறுப்பினர்கள் இதை 'கருப்பு மசோதா' என்று அழைக்கிறார்கள், ஆனால் முதல்வர் மு.க. ஸ்டாலினே கருப்புச் செயல்களில் ஈடுபடும் ஒரு முதலமைச்சர் என்பதால் அந்த சட்டத்தை அப்படி அழைக்க அவருக்கு உரிமை இல்லை” எனப் பேசினார்.