தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் நாளை மறுநாள் (23.01.2025) செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்ட தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்ள உள்ளார். இதில் தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்குபெறும் கட்சிகளை கூட்டணி தலைமை அறிமுகப்படுத்த உள்ளது. 

Advertisment

இதனையொட்டி தமிழக பாஜகவின் தேர்தல் மேலிடப் பொறுப்பாளரான பியூஸ் கோயல் தமிழகம் வந்துள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பியூஸ் கோயலை சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைத்துக்கொண்டார். இந்த சந்திப்பின் போது நயினார் நாகேந்திரன், எல். முருகன், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

Advertisment

இந்நிலையில் மத்திய உள்துறை அமித்ஷா எக்ஸ் சமூக வலைத்தளத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில், “வளமான தமிழகம் - வலுவான தேசிய ஜனநாயகக் கூட்டணி. டி.டி.வி. தினகரன்தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததை நான் வரவேற்கிறேன். திமுகவின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால் தமிழக மக்கள் சோர்வடைந்து, பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால், தமிழகம் வளர்ச்சி மற்றும் செழிப்பின் புதிய உயரங்களுக்கு எடுத்து செல்ல இருப்பதை ஆசீர்வதிக்க தயாராக இருக்கின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.