தமிழக பா.ஜ.க சார்பில் திருநெல்வேலியில் உள்ள தச்சநல்லூரில் பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் இன்று (22.08.2025) நடைபெற்று வருகிறது. இதில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான பூத் கமிட்டி மாநாடு, தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் பிரமாண்டமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருநெல்வேலிக்கு வருகை தந்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அங்கிருந்து தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு இன்று மாலை மத்திய அமைச்சர் அமித்தா வருகை தந்தார். அதன் பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருநெல்வேலி வருகை தந்துள்ளார். மத்திய அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி திருநெல்வேலியில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். நயினார் நாகேந்திரன் வீட்டில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்ற பிறகு மத்திய அமைச்சர் அமித்ஷா இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளார். இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ள அமித்ஷா, நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.
இந்நிலையில் பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் மத்திய அமைச்சர் அமித்ஷா உரையாற்றுகையில், “தமிழில் பேச முடியாததற்கு வருந்துகிறேன். இது வீரம், கலாச்சாரம் மற்றும் கருணை ஆகியவற்றின் நிலம். நான் இதற்கு வணக்கம் செலுத்துகிறேன். நாகலாந்து ஆளுநரும், தமிழ்நாட்டின் மகனுமான இல. கணேசன் சில நாட்களுக்கு முன்பு காலமானார். இன்று, அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன். அவர் தனது முழு வாழ்க்கையையும் பாஜகவுக்காக அர்ப்பணித்தார். தமிழுக்கு காசி சங்கமம் விழா நடத்துவதன் மூலம் பெருமை சேர்க்கப்படுகிறது. கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திரனுக்கு விழா எடுத்தவர் பிரதமர் மோடி ஆவார்.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதத்தின் முதுகெலும்பை முறியடித்தவர் பிரதமர் மோடி ஆவார். பிரதமர், முதல்வர்கள் மற்றும் அமைச்சர்கள் குற்ற வழக்கில் சிக்கி கைதானால் பதவியில் நீடிக்க கூடாது என சட்டம் கொண்டு வரப்பட உள்ளது” எனப் பேசினார். இந்த மாநாட்டில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.