Union Minister Amit Shah orders officers arrest all criminals related with delhi red fort incident
தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளமாகவும், இந்தியாவின் முக்கியப் பகுதியாகவும் உள்ள செங்கோட்டையில் பல்வேறு கட்ட பாதுகாப்புகளை மீறி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கவலைக்கிடமாக உள்ளனர்.
இந்த கார் குண்டுவெடிப்புக்கு முன்னதாக நேற்று (10/11/2025) நண்பகலில் ஹரியானாவில் மருத்துவக் கல்லூரியில் சூட்கேஸில் வெடிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவலின் அடிப்படையில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறையினர் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் ஒரு ஏகே 47 துப்பாக்கியும், 8 குண்டுகள், 360 கிலோ வெடி பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அதீல் அகமது ராதர் என்ற மருத்துவர், முசாமில் ஷகீல் என்ற மருத்துவர் என இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். பேட்டரியுடன் 20 டைமர்கள், 24 ரிமோட்டகள் கைப்பற்றப்பட்டதால் வெடிகுண்டு தாக்குதலுக்கான முயற்சியா என்ற அச்சம் நேற்று நண்பகலிலேயே தலை நகரில் பரவியிருந்தது.
இந்நிலையில்தான் செங்கோட்டை முதலாவது நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற ஐ 20 கார் ஒன்று, நேற்று (10.11.2025) இரவு பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் அருகே இருந்த சில வாகனங்கள் தீப்பற்றி எரிந்து தீக்கிரையாகி உருக்குலைந்தன. இதில் உயிரிழப்பு 12 ஆக அதிகரித்துள்ளது. 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட காரை ஓட்டி வந்தவர் மருத்துவர் முகமது உமர் என தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கியுள்ளது. இதனால் விரைவில் இது பயங்கரவாத தாக்குதலா? அல்லது விபத்தா? என இந்த சம்பவத்தின் முழு பின்னணி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியதோடு மட்டுமல்லாமல் இச்சம்பவம் தொடர்பாக நேற்று முதலே பல்வேறு கட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
அந்த வகையில், டெல்லி கார் குண்டுவெடிப்பு குறித்தும் டெல்லி பாதுகாப்பு குறித்தும் உயர்மட்ட அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (11-11-25) காலை ஆலோசனை நடத்தினார். அதனை தொடர்ந்து, குற்றவாளிகளை வேட்டையாடுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில், ‘டெல்லி கார் குண்டுவெடிப்பு குறித்து மூத்த அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டங்களை நடத்தினேன். இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள ஒவ்வொரு குற்றவாளியையும் வேட்டையாடுமாறு அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்தச் செயலில் ஈடுபட்ட அனைவரும் எங்கள் நிறுவனங்களின் முழு கோபத்தையும் எதிர்கொள்வார்கள்’ எனப் பதிவிட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் அமித் ஷா இந்த உத்தரவு பிறப்பித்திருப்பது குற்றவாளிகள் அனைவரும் பிடிபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us