இஸ்லாமியர்களின் அதிகரிப்புக்கு ஊடுருவல்களே காரணம் என்று மத்திய உள்துறை அமைச்ச அமித் ஷா பேசியிருப்பது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தலைநகர் டெல்லியில், தைனிக் ஜாக்ரனின் முன்னாள் தலைமை ஆசிரியர் நரேந்திர மோகனின் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி நேற்று (11-10-25) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமைச்சர், ‘ஊடுருவல், மக்கள்தொகை மற்றும் ஜனநாயகம்’ என்ற தலைப்பில் பேசினார். அதில் அவர் பேசியதாவது, “ஊடுருவல் என்பது ஒரு அரசியல் பிரச்சனை அல்ல, மாறாக அது தேசிய பிரச்சனை. இது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல். எல்லை பாதுகாப்பு படை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஊடுருவல்களை மத்திய அரசு தான் நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறுகிறது. மத்திய அரசால் மட்டுமெ ஊடுருவல்களை தடுக்க முடியாது. சில கட்சிகள் ஊடுருவல்காரர்களை வாக்கு வங்கியாகக் கருதுகிறார்கள். அதனால் மாநில அரசுகள் அத்தகைய ஊடுருவல்காரர்களைப் பாதுகாக்கின்றன.
குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லைகளில் ஊடுருவல் ஏன் நடைபெறுவதில்லை? ஒருவர் சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைவதை மாவட்ட நிர்வாகம் அடையாளம் காணத் தவறினால், ஊடுருவலை எவ்வாறு நிறுத்த முடியும்? ஒரு அகதிக்கும் ஊடுருவும் நபருக்கும் உள்ள வித்தியாசத்தை ஒருவர் புரிந்து கொள்ளாத போது, அவர்கள் தங்கள் ஆன்மாவையே ஏமாற்றிக் கொள்கிறார்கள். முஸ்லிம் மக்கள் தொகை 24.6 சதவீதம் அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் இந்து மக்கள் தொகை 4.5 சதவீதம் குறைந்துள்ளது. கருவுறுதல் விகிதத்தால் இது நடக்கவில்லை என்பதால் நான் இதைச் சொல்கிறேன். இது ஊடுருவலால் நிகழ்ந்துள்ளது. மதத்தின் காரணமாக இந்தியப் பிரிவினை ஏற்பட்டது. இந்தியாவின் இருபுறமும் பாகிஸ்தான் உருவாக்கப்பட்டது. அந்த பக்கங்களில் இருந்தும் ஊடுருவல் நடந்தது. இதன் விளைவாக மக்கள் தொகையில் இவ்வளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.
ஊடுருவல்காரருக்கும் அகதிக்கும் உள்ள வித்தியாசத்தை நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன். பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் குறைந்து வந்த இந்து மக்கள் தொகையில் பலர் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர். ஆனால், இந்தியாவில் முஸ்லிம் மக்கள் தொகை கருவுறுதல் காரணமாக அதிகரிக்கவில்லை, பல முஸ்லிம்கள் நாட்டிற்குள் ஊடுருவியதால்தான் அதிகரித்துள்ளது. ஊடுருவல் இல்லாமல் இது சாத்தியமில்லை. மேற்கு வங்கத்தின் பல மாவட்டங்களில், இந்த வளர்ச்சி விகிதம் 40 சதவீதமாக உள்ளது, மேலும் பல எல்லைப் பகுதிகளில், இது 70 சதவீதத்தை எட்டியுள்ளது. கடந்த காலங்களில் ஊடுருவல் நடந்துள்ளது என்பதற்கான தெளிவான சான்றாகும். குஜராத் மற்றும் ராஜஸ்தானில் எல்லை பகுதிகள் உள்ளது, ஆனால் அங்கு ஊடுருவல்கள் நடைபெறவில்லை” என்று பேசினார்.