டெல்லி செங்கோட்டை அருகே இன்று கார் வெடித்து 9 பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளித்துள்ளார்.
தலைநகர் டெல்லியின் முக்கிய சுற்றுலாத் தளமான செங்கோட்டை மெட்ரோ முதலாவது நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்று பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்து சிதறியது. இதனால், அருகே இருந்த சில வாகனங்கள் தீப்பற்றி எரிந்தது. இதனால், பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டு உருகுலைந்து போனது. கார் வெடித்துச் சிதறியதை அடுத்து தீயணைப்பு வீரர்கள், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் செங்கோட்டைக்கு விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு முயற்சி செய்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதனிடையே, கார் வெடித்து சிதறிய இடத்தில் இருந்த சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், 9 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைககாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஹரியானாவில் வெடிபொருட்களுடன் 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், டெல்லியில் கார் வெடிப்பு சம்பவம் நடந்துள்ளதால் வெடிகுண்டு வெடித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதனால், வெடித்து சிதறிய காரில் சிஎன்ஜி சிலிண்டர் இருந்ததால் விபரீதம் ஏற்பட்டதா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் விபத்தா அல்லது சதிச் செயலா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், என்.ஐ.ஏ, உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தலைநகர் டெல்லியில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், அண்டை மாநிலங்களாக உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய அரசின் போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லியில், இந்த பயங்கர சம்பவம் நடந்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இன்று மாலை 7 மணியளவில், டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னலில் ஹூண்டாய் ஐ20 காரில் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் சில பேர், காயமடைந்தனர் மற்றும் சில வாகனங்கள் சேதமடைந்தன. சிலர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பு பற்றிய தகவல் கிடைத்த 10 நிமிடங்களுக்குள், டெல்லி குற்றப்பிரிவு மற்றும் டெல்லி சிறப்புப் பிரிவின் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்தன. என்.எஸ்.ஜி (NSG) மற்றும் என்.ஐ.ஏ (NIA) குழுக்கள், எஃப்.எஸ்.எல் (FSL) உடன் இணைந்து, இப்போது முழுமையான விசாரணையைத் தொடங்கியுள்ளன.
அருகிலுள்ள அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லி கமிஷனர் மற்றும் சிறப்புப் பிரிவு பொறுப்பாளரிடமும் நான் பேசியுள்ளேன். டெல்லி கமிஷனர் மற்றும் சிறப்புப் பிரிவு பொறுப்பாளர் சம்பவ இடத்தில் உள்ளனர். நாங்கள் அனைத்து சாத்தியக்கூறுகளையும் ஆராய்ந்து வருகிறோம், மேலும் அனைத்து சாத்தியக்கூறுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு முழுமையான விசாரணையை மேற்கொள்வோம். அனைத்து விருப்பங்களும் உடனடியாக விசாரிக்கப்படும், மேலும் முடிவுகளை பொதுமக்களுக்கு வழங்குவோம். நான் விரைவில் சம்பவ இடத்திற்குச் செல்வேன், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்வேன்” என்று கூறினார். அதனை தொடர்ந்து அவர், இரவோடு இரவாக சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/10/redamit-2025-11-10-21-46-00.jpg)