நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில், பஹல்காம் தாக்குதல், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பேச்சு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட வேண்டும் என மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளிலுமே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த 1 வாரமாக நாடாளுமன்றத்தில் எந்த விவாதமும் நடக்காமல் முடங்கியுள்ளது.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆபரேஷன் சிந்தூர் குறித்து இன்று (29.07.2025) மக்களவையில் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “அப்பாவி பொதுமக்கள் தங்கள் குடும்பங்களுக்கு முன்பாகவே, அவர்களின் மதத்தைக் கேட்டு கொல்லப்பட்டனர். இந்த காட்டுமிராண்டித்தனமான செயலை நான் கண்டிக்கிறேன் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகாதேவ் நடவடிக்கையில், இந்திய ராணுவம், சி.ஆர்.பி.எஃப் மற்றும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை ஆகியவை பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகளை கூட்டான வீழ்த்தியுள்ளன.
அதாவது மகாதேவ் நடவடிக்கையில், சுலேமான் என்கிற ஃபைசல், ஆப்கான் மற்றும் ஜிப்ரான் ஆகிய 3 பயங்கரவாதிகளும் இந்திய ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் ஜம்மு - காஷ்மீர் காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் கொல்லப்பட்டனர். சுலைமான் லஷ்கர் - இ - தொய்பாவின் ஏ - வகை ( A - category) தளபதியாக இருந்தார். ஆப்கான் ஒரு ஏ-வகை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி. மேலும் ஜிப்ரானும் ஒரு ஏ - கிரேடு பயங்கரவாதி. பைசரன் பள்ளத்தாக்கில் நமது குடிமக்களைக் கொன்ற 3 பயங்கரவாதிகளும் அழிக்கப்பட்டனர். நேற்றைய (28.07.2025) நடவடிக்கையில் சுலேமான், ஆப்கான் மற்றும் ஜிப்ரான் ஆகிய 3 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். அவர்களுக்கு உணவு வழங்கியவர்கள் முன்னதாகவே கைது செய்யப்பட்டனர். இந்த பயங்கரவாதிகளின் உடல்கள் ஸ்ரீநகருக்கு கொண்டு வரப்பட்டவுடன் அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்” எனப் பேசினார்.