மரக்காணத்தில் இருந்து புதுச்சேரி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மதியம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் முக்கியமான நான்கு வழிச்சாலை திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வரை 46 கிலோ மீட்டர் தூரத்திற்கு 2,157 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், நாகப்பட்டினம் இந்த பகுதிகளுக்கு இடையேயான போக்குவரத்து இணைப்புக்கு இருவழி தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள நிலையில் மரக்காணம் முதல் புதுச்சேரி வரையிலான 46 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 வழிச்சாலையாக மாற்றும் திட்டமானது மேம்படுத்தப்பட உள்ளது.
இது போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதோடு பாதுகாப்பை ஏற்படுத்தும் என்ற நோக்கத்தில் திட்டம் செயல்படுத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பலருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் சுற்றுலாத்துறை மேம்படுவதோடு தொழில் வளர்ச்சி திட்டத்திற்கும் இந்த நான்கு வழிச்சாலை திட்டம் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமல்லாது எரிவாயு மானியத்திற்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பீடாக முப்பதாயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவும், உஜ்வாலா கேஸ் சிலிண்டர் மானியமாக 12,000 கோடி ஒதுக்கீடு செய்யவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.