மகாராஷ்டிரா மாநிலத்திலும் இந்தி திணிப்புக்கு எதிராக கடும் எதிர்ப்பு குரல் எழுந்து வருகிறது. மகாராஷ்டிராவில் மராத்தியில் பேசவில்லை என்றால் கன்னத்தில் அறையுங்கள் என்று நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே சில மாதங்களுக்கு பேசியிருந்தார். அவரது பேச்சு, மகாராஷ்டிராவில் பேசுபொருளானது. இதனை தொடர்ந்து, மராத்தி மொழி பேசதாவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் மும்பையில் பணிபுரியும் பாதுகாவலர் ஒருவர் மராத்தி மொழி பேச தெரியாது என்று சொன்னதால், நவநிர்மாண் சேனா கட்சியினர் அவரின் கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்தினர். அதே போல், வங்கி பணப்பரிவர்த்தனைகளில் மராத்தி மொழி பயன்படுத்தாததால் வங்கி ஊழியர் ஒருவர் மீது, நவநிர்மண் சேனா கட்சியினர் தாக்குதல் நடத்தினர். இதனால், அங்கு தொடர்ந்து மொழி தொடர்பான சர்ச்சை நிகழ்ந்து வருகிறது.

இதற்கிடையில், தேசிய கல்வி கொள்கை மூலம் வரும் 2025-2026 கல்வியாண்டில் மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு 1-5ஆம் வகுப்புகளில் மூன்றாவது மொழியாக இந்தி மொழி கட்டாயமாக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்திருந்தது. மகாராஷ்டிராவில் இந்தியை மொழி திணிப்பதாகக் கூறி அந்த நடவடிக்கைக்கு நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே, காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிராக மாநிலத்தில் பெரும் சர்ச்சையானதால், மகாராஷ்டிராவில் மராத்தி கட்டாயமாகவே உள்ளது என்றும், இந்தி மொழி திணிக்கப்படவில்லை என்றும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் திடீரென பல்டி அடித்தார். அதனை தொடர்ந்து, பள்ளிகளில் மூன்றாவது மொழியாகக் கண்டிப்பாக இந்தி மொழி இருக்கும் என்ற முடிவை மகாராஷ்டிரா அரசு திரும்பப் பெற்றது.

அதனை தொடர்ந்து, 1ஆம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி கட்டாயமாக இருப்பதற்கு பதிலாக விருப்பமான மூன்றாவது மொழியாக இருக்கும் என்றும், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் இந்தி தவிர வேறு எந்த மொழியையும் படிக்க விருப்பம் தெரிவித்தால் அவர்கள் அதை தேர்வு செய்து கொள்ளலாம். அதற்கேற்ப ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மாநில அரசு அரசாணை ஒன்றை பிறப்பித்தது. இந்தி மொழியை ஆதரிக்கும் தேசிய கல்வி கொள்கையில் இருந்து முதலில் பின்வாங்கிவிட்டு, அதன் பின்னர் அதே இந்தி மொழியை மறைமுகமாக மாணவர்களுக்கு திணிப்பதாக கூறி மராத்தி அமைப்புகள் உள்பட எதிர்க்கட்சிகள் மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன.

மாநில அரசின் இந்த முடிவுக்கு எதிராக வரும் ஜூலை 7ஆம் தேதி இணைந்து போராட்டம் நடத்தப்போவதாக ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோர் அறிவித்தனர். சிவசேனா கட்சியில் இருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து நவநிர்மாண் சேனா கட்சியை ஆரம்பித்த உத்தவ் தாக்கரேவின் சித்தப்பா மகனான ராஜ் தாக்கரே, இந்தி திணிப்புக்கு எதிராக மீண்டும் உத்தவ் தாக்கரேவுடன் சேர்ந்திருந்தது அம்மாநில அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநிலத்தில் இந்தி திணிப்புக்கு எதிராக கடும் எதிர்ப்பு வந்ததால், மகாராஷ்டிரா அரசு பள்ளிகளில் இந்தி மொழி திணிக்கப்படாது என்று கூறி தனது இரண்டு முடிவுகளிலும் இருந்து மகாராஷ்டிரா அரசு பின்வாங்கியது.

Advertisment

thackareyy
Unified Hindi language issue Thackeray brothers on the same platform after 20 years

Advertisment

இந்த நிலையில், சகோதர்களான உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே அறிவித்த இந்தி எதிர்ப்பு போராட்ட வெற்றி கூட்டம் இன்று (05-07-25) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உத்தவ் தாக்கரேவும், ராஜ் தாக்கரேவும் ஒரே மேடையில் அமர்ந்திருந்து தங்களது அன்பை பரிமாறிக் கொண்டனர். இதில் பேசிய ராஜ் தாக்கரே, “இந்தி வெறும் 200 ஆண்டுக்கால வரலாறு கொண்ட மொழி. இந்தி பேசாத மாநிலங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்துள்ளன. மூன்றாம் மொழிக்கு இந்தியாவில் என்ன தேவை உள்ளது? மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம். மகாராஷ்டிராவில் மராட்டியத்திற்கு மட்டுமே முக்கியத்துவம். ஆனால், பா.ஜ.க. இந்தியை திணிக்கிறது. இந்தியா முழுவதும் மராட்டிய பேரரசர்கள் ஆட்சி செய்தபோது மராத்தியை திணிக்கவில்லை; மராட்டியத்திலிருந்து மும்பையை பிரிக்க சதி நடக்கிறது” என்று ஆவேசமாகப் பேசினார்.

உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே ஆகியோர் மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். உத்தவ் தாக்கரே, பால் தாக்கரேவின் மகன் ஆவார். ராஜ் தாக்கரே, பால் தாக்கரேவின் தம்பி ஸ்ரீகாந்த் தாக்கரேவின் மகன் ஆவார். உத்தவ் தாக்கரேவை தன்னுடைய அரசியல் வாரிசாக பால் தாக்கரே அறிவித்ததால், ராஜ் தாக்கரே 2005 இல் சிவசேனாவை விட்டு வெளியேறி நவநிர்மாண் சேனா கட்சியைத் தொடங்கினார். 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரப் போட்டியில் பிரிந்த உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே இந்தி திணிப்புக்கு எதிராக ஒன்றாக சேர்ந்திருப்பது அம்மாநில அரசியலில் என்பது அம்மாநில அரசியலில் புதிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.