கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி. கொத்தங்குடி ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, ஓட்டுநர் அணி இணை செயலாளர் சுப்பு என்கிற வெங்கடேசன், இளைஞர் அணி அமைப்பாளர் நடராஜன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதா வரவேற்றார்.
இந்த முகாமை பரங்கிப்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளரும், வட்டார ஆத்மா குழு தலைவருமான மனோகர் குத்துவிளக்கு ஏற்றி முகாமை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் 16 துறை அரசு அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து பல்வேறு சம்பந்தப்பட்ட மனுக்களை பெற்றனர். முன்னதாக கர்ப்பிணி பெண்களுக்கு மருத்துவ பெட்டகம் வழங்கப்பட்டது.
அதோடு பொதுமக்கள் கலந்து கொண்டு அவர்களின் குறைகளை மனுவாக கொடுத்தனர். இதில் சிதம்பரத்தில் இன்று (09.09.2025 - செவ்வாய்கிழமை) திருமணம் செய்து கொண்ட தையா குப்பத்தை சேர்ந்த சந்துரு அவரது புது மனைவியுடன் தாலி கட்டிய கையோடு முகாமிற்கு வந்து பரஞ்சோதி (வயது 34) என்ற கண் பார்வையற்ற மாற்று திறனாளியான அவரது அண்ணனை அழைத்து வந்து மனு அளித்தனர். இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையினர் 40 நாட்களுக்குள் மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.