ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியத்துக்கு உட்பட்டது சாத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் முகாமானது இன்று (03.09.2025) நடைபெற்றது. இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய குறைகளைக் கோரிக்கை மனுக்களாக அரசு அலுவலர்களிடம் வழங்கினர். இந்நிலையில் உப்புப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடபதி என்ற முதியவர் அந்த கிராமத்தில் உள்ள வனத்துறைக்குச் சொந்தமான இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும் அந்த இடத்தினை மீட்க வேண்டும் எனக் கூறி கோரிக்கை மனுவை வழங்கினார். 

Advertisment

இந்த மனுவை வழங்கிய பின்பு அவர் வனத்துறையினர் அரசுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்கு அதிகாரிகள் துணை போவதாகக் கத்தி கூச்சலிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் அவரிடம் பேசி சமாதானப்படுத்த முயற்சித்துள்ளார். ஆனால் அவர் சமாதானம் ஆகாமல் தொடர்ந்து அந்த பகுதியில் கூச்சலிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வாக்குவாதம் இருவருக்கும் இடையே கை கலப்பாக மாறியுள்ளது. இதில் முதியவர் வெங்கடபதிக்குக் கண்ணின் ஓரமாக லேசான காயம் ஏற்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆர்காடு போலீசார் முதியவரைச் சமாதானப்படுத்த முயற்சித்துள்ளார். இருப்பினும் அவர் தொடர்ந்து கூச்சலிட்டதால் அவரை காவலர் தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து அரசுப் பணியைச் செய்ய விடாமல் தடுத்ததாகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.