அண்மையில் 'உங்களுடன் ஸ்டாலின்' எனும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்திருந்தார். இந்த திட்டத்தின் கீழ் கொடுக்கப்படும் மனுக்களுக்கு 45 நாட்களில் தீர்வு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சிவகங்கையில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மக்கள் அளித்த மனுக்கள் வைகை ஆற்றில் மிதந்து வருவதாக நபர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று விசாரணை ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து வாங்கப்பட்ட மனுக்கள் மிதப்பதாக கார்த்திக் என்ற நபர் போலீசாருக்கு தகவல் கொடுத்த நிலையில் ஆற்றுப் பகுதிக்கு வந்த போலீசார் தண்ணீரில் மிதந்த மனுக்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கடந்த 21 மற்றும் 22 ஆம் தேதிகளில் சிவகங்கையின் கீழடி, கொந்தகை, நெல்முடிக்கரை,பூவந்தி, ஏனாதி, மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் வீசப்பட்டது தெரியவந்துள்ளது. இதற்கு காரணம் யார் என்று தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், 'உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் மூலம், மக்கள் குறை உடனுக்குடன் நிவர்த்தி செய்ப்படும் எனக்கூறி இந்த விடியா அரசால் வாங்கப்பட்ட மனுக்கள், இன்று சிவங்கங்கை வைகை ஆற்றில் குப்பையாக கொட்டப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனங்கள்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது ஊர் ஊராக சென்று பொதுமக்களிடம் இருந்து வாங்கிய மனுக்கள், கறுப்பு பெட்டிகளில் இன்னும் பூட்டப்பட்டுள்ளது, சாவியை காணவில்லை. நீட் ஒழிப்பு வாக்குறுதி கொடுத்து ஆளுங்கட்சியான பிறகு கூட வெற்று நீட் ஒழிப்பு மாநாடு நடத்தி மாணவர்களிடம் வாங்கிய கையெழுத்து படிவங்களை கூட காற்றில் பறக்க விடப்பட்டு குப்பையாக்கப்பட்டது.
உங்களுடன் என்ற பெயரில் விடியா திமுக அரசு விளம்பரத்திற்காக ஆரம்பித்த திட்டத்தின் மனுக்கள் இன்று அஸ்தியை கரைப்பது போல, சிவகங்கை வைகை ஆற்றில் மீண்டும் குப்பை ஆக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்கு உரியது.
மக்களின் வலிகளை, உணர்வுகளை, வேதனைகளை புரிந்துகொள்ள இயலாமல், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது போல் நாடகமாடி, உங்களுடன் ஸ்டாலின் என்ற கண்துடைப்பு நிகழ்ச்சியை அரங்கேற்றம் செய்த இந்த விடியா அரசிற்கு வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்' என தெரிவித்துள்ளார்.