Advertisment

‘உங்களுடன் ஸ்டாலின்’ ஊரை ஏமாற்றும் திட்டம்'- பாமக அன்புமணி விமர்சனம்

a4246

'ungaludan stalin' is a plan to deceive the town' - PMK Anbumani criticizes Photograph: (pmk)

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த 'உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் ஊரை ஏமாற்றும் திட்டம் என பாமகவின் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டு மக்களுக்கு அரசின் சேவைகளை வழங்குவதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் வரும் 15&ஆம் தேதி தொடங்கி திசம்பர் 14&ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களுக்கு தினமும் வழங்கப்பட வேண்டிய உணவை வழங்காமல் பறித்து வைத்துக் கொண்டு ஐந்தாண்டுக்கு ஒருமுறை வழங்குவது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலையோ, அதைவிட மோசமான ஏமாற்று வேலை தான் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் ஆகும். இத்திட்டத்தின் பெயரால் மக்களை அரசு ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் தமிழ்நாட்டில் வரும் 15&ஆம் தேதி முதல் நடத்தப்படவிருப்பதாகவும், அதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை தலைகீழாக மாறப்போவதாகவும் ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால், உண்மையில் இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் செயல்படுத்தப்பட போவதில்லை; யாருக்கும் எந்தப் பயனும் கிடைக்கவும் போவதில்லை.

இத்திட்டத்தின் மூலம் அடுத்த 4 மாதங்களில் நான்கு கட்டங்களாக பத்தாயிரம் முகாம்கள் நடத்தப்படவுள்ளன. அந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத்துறைகளைச் சார்ந்த 43 சேவைகளும் ,ஊரகப்பகுதிகளில் 15 துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். வழக்கமாக மக்களுக்குத் தேவைப்படும் சாதிச் சான்றிதழ்கள்,  பிறப்புச் சான்றிதழ்கள், இறப்புச் சான்றிதழ்கள், கலைஞர் கைவினைத் திட்டம், ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிதி உதவி திட்டம்,  முதியோர் உதவித் தொகை, பாதாள சாக்கடை இணைப்பு உள்ளிட்டவற்றுக்காகத் தான் இந்த முகாம்களில் பொதுமக்கள் விண்ணப்பிக்க முடியும். இவை வழக்கமாகக் கிடைக்கும் சேவைகள் தான்.

Advertisment

வழக்கமான சேவைகளுடன் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ரூ.1000 பெறுவதற்கான விண்ணப்பமும் இந்த முகாம்களில் பெறப்படும் என்று கூறி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது தமிழக அரசு. 2025&26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனடையும் குடும்பத் தலைவிகளின் எண்ணிக்கை 1.15 கோடி ஆகும். அவர்களுக்கு மாதம் ரூ.1000 வீதம் நிதி வழங்க வேண்டுமானால், அதற்கு ரூ.13,800 கோடி தேவை. ஆனால், 2025-&26ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டத்திற்காக ரூ.13,807 கோடி மட்டும் தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது தேவையை விட வெறும் ரூ.7 கோடி மட்டும் தான் அதிகம். இதைக் கொண்டு 5,833 பேருக்கு மட்டும் தான் கூடுதலாக உரிமைத் தொகை வழங்க முடியும்.

ஆனால், 10,000 மையங்களில் இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன. முகாமுக்கு 100 பேர் என வைத்துக் கொண்டாலும் 10 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை வழங்கப்பட வேண்டும். அதற்கான நிதி அரசால் ஒதுக்கப்படவில்லை. அதனால் தான்,   ஜூன் 4-ஆம் தேதி முதல் விண்ணப்பங்களைப் பெறப் போவதாக அறிவித்திருந்த தமிழக அரசு, இப்போது ஜூலை 15ஆம் தேதி முதல் நவம்பர் 14ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவித்துள்ளது. அதன் பொருள் நவம்பர் மாதம் வரை மகளிர் உரிமைத் தொகை கூடுதலாக யாருக்கும் வழங்கப்படாது என்பது தான். அதன்பின் மனுக்களை ஆய்வு செய்வதாகக் காலம் தாழ்த்தி, பொங்கல் திருநாளில் தொடங்கி தேர்தலுக்கு முன் சில மாதங்களுக்கு மட்டும் உரிமைத் தொகை வழங்கி மக்களை ஏமாற்றுவது தான் அரசின் நோக்கம். இதற்கெல்லாம் தமிழக மக்கள் மயங்க மாட்டார்கள்.

மகளிர் உரிமைத் தொகை தவிர மீதமுள்ள அனைத்தும் வழக்கமான சேவைகள் தான். இந்த சேவைகள் மக்களுக்கு இயல்பாக வழங்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அதற்காகத் தான் பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி அனைத்து சேவைகளும் மக்களுக்கு குறித்த காலத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அந்த சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால், தமிழக அரசால் குறிப்பிடப்படும் அனைத்து சேவைகளும் அதிக அளவாக 15 நாள்களில் கிடைக்க வகை செய்யப்பட்டிருக்கும். ஆனால்,  ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க 45 நாள்கள் ஆகும். ஆண்டு முழுவதும் 15 நாள்களுக்குள் கிடைக்க வேண்டிய சேவைகளை, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை விண்ணப்பித்து 45 நாள்களில்  பெறுவதற்கு ஒரு சிறப்புத் திட்டம் தேவையா? அதனால் தான் இதை ஏமாற்று வேலை என குற்றஞ்சாட்டுகிறேன்.

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால், பொதுச் சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்பின் சட்டப்பேரவையில் ஆளுனர் ஆற்றிய உரையின் போதும், விரைவில் சேவை பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறப்பட்டிருந்தது.  ஆனால், அதன்பின் 4 ஆண்டுகள் ஆகியும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. சேவை பெறும் உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் தமிழக அரசால் குறிப்பிடப்படும் 46 வகையான சேவைகளையும் பெறுவது மக்களின் உரிமையாகியிருக்கும். ஆனால், அதை செய்யத் தவறிவிட்ட தமிழக அரசு, இப்போது அதே சேவைகளை பெற மக்களை முகாம்களுக்கு வரவழைத்து கையேந்தி நிற்க வைக்கிறது. இதற்குப் பெயர்தான் சமூகநீதியா?

திமுக அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யாமல், விளம்பரம் மட்டுமே செய்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. சேவை பெறும் உரிமைச் சட்டத்திலும் அதையே தான் செய்து கொண்டிருக்கிறது. இப்படியே மக்களை தொடர்ந்து ஏமாற்றி விடலாம் என்று திமுக அரசு நினைத்தால், இறுதியில் ஏமாறப்போவது அதுவாகத்தான் இருக்கும். எனவே, உங்களுடன் ஸ்டாலின் என்ற  பெயரில் மக்களை ஏமாற்றுவதை விடுத்து சேவை உரிமைச் சட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளார்.

anbumani ramadoss pmk dmk m.k.stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe