கோவை மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி, அத்தியாவசிய சேவைகளைப் பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், “தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஊரக மற்றும் நகர்ப்புற மக்கள் அனைவரும் பயனடையும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கோவை மாவட்டத்தில் மொத்தம் 334 முகாம்கள் நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளன. முதல் கட்டமாக, ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 14 வரை 120 முகாம்கள் நடைபெறும். இரண்டாவது கட்டமாக, ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர் 14 வரை 96 முகாம்கள், மூன்றாவது கட்டமாக, செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 14 வரை 96 முகாம்கள், மற்றும் நான்காவது கட்டமாக, அக்டோபர் 15 முதல் அக்டோபர் 31 வரை 24 முகாம்கள் நடைபெறும்.
இந்த முகாம்கள், கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில் 66 இடங்களிலும், 7 நகராட்சிப் பகுதிகளில் 50 இடங்களிலும், 66 பேரூராட்சிகளில் 102 இடங்களிலும், நகரை ஒட்டிய ஊராட்சிப் பகுதிகளில் 82 இடங்களிலும் நடைபெற உள்ளன. இதற்காக 1,694 களப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு உதவி வழங்குவர். மேலும், வீடு வீடாகச் சென்று விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முகாம்களில் மருத்துவப் பரிசோதனை, மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள், புதிய சொத்து வரி, சொத்து வரி மாற்றம், ரேஷன் கார்டு உள்ளிட்ட சேவைகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். இ-சேவை மையங்களும் முகாம்களில் செயல்படும். காவல்துறையின் ‘மே ஐ ஹெல்ப் யு’ உதவித் திட்டமும் இதில் இடம்பெறும். முகாம்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆட்டோக்கள் மூலம் பிரச்சாரம் நடத்தப்படுகிறது. எனவே பொதுமக்கள் இந்த உங்களுடன் ஸ்டாலின் முகாமை பயன்படுத்தி பயனடையும்படி கேட்டுக்கொள்வதாக கூறினார்.