சிதம்பரம் அருகே அண்ணாமலை நகரில் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம் நடைபெற்றது. இந்த முகாமை அண்ணாமலை நகர் சிறப்பு நிலைப் பேரூராட்சி மன்றத் தலைவர் பழனி கலந்து கொண்டு, பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று முகாமைத் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள், வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை, தொழிலாளர் நலத் துறை, மின்சாரத் துறை, மகளிர் திட்டம், நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு, அந்தந்தத் துறைகளைச் சார்ந்த குறைகளை உடனடியாகத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
காலை 9 மணிக்குத் தொடங்கிய இந்த முகாம் மாலை 5 மணி வரை நடைபெற்றது, இதில் பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். மொத்தம் 603 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் 40 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அண்ணாமலை நகர் பேரூராட்சியில் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி அடுத்த முகாம் நடைபெறும். இதில் விடுபட்டவர்கள் அனைவரும் கலந்து கொண்டு மனு அளித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி மன்றத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்த முகாமில் அண்ணாமலை நகர் சிறப்பு நிலைப் பேரூராட்சி செயல் அலுவலர் பா. கோமதி, துணைத் தலைவர் தமிழ்செல்வி, பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, முகாமிற்கு வரும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தனர்.