திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பிரகாஷ் நகர்ப் பகுதியில் பாதாளச் சாக்கடை அமைக்கப்பட்டது. இந்த பாதாளச் சாக்கடையில் உள்ள அடைப்பைச் சரி செய்வதற்கான தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒப்பந்த தொழிலாளர்களான சின்ன சேலத்தைச் சேர்ந்த பிரபுவும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரவியும் ஈடுபட்டிருந்தனர்.
அதன்படி பாதாளச் சாக்கடையில் இருந்த அடைப்பைச் சரி செய்வதற்காகப் பிரபு முதலில் இறங்க முயன்றுள்ளார். அப்போது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரவி, பிரபுவைக் காப்பாற்றுவதற்காகப் பாதாள சாக்கடையில் இறங்கியுள்ளார். அச்சமயத்தில் இருவரையும் விசவாயு தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர் உயிரிழந்த இருவரின் உடலையும் மீட்டனர். அதன் பின்னர் உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . மேலும் இது குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசவாயு தாக்கி ஒப்பந்த தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/09/22/try-trainagee-ins-2025-09-22-20-33-48.jpg)