Undeclared emergency? tirunelveli Congress leader under house arrest due to Amit Shah's visit
பா.ஜ.க.வின் தென்மண்டல பூத் கமிட்டி உறுப்பினர்களின் ஆய்வுக் கூட்டமாநாடு நேற்று (22-08-25) நெல்லையின் தச்சநல்லூரில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசினார். அவரது வருகையை ஒட்டி நெல்லை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு என்ற பெயரில் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க ட்ரோன்கள் பறக்கவும், கருப்பு கொடி உள்ளிட்ட சம்பவங்களை தடுப்பதற்குமான பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டிருந்தது.
அன்றைய தினம் நெல்லை மாநகர மாவட்ட காங்கிரசின் சார்பில் வாக்கு திருட்டு மூலம் வெற்றி பெற்ற ஒன்றிய அரசைக் கண்டித்து போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் நிர்வாகிகள் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்து, முகம் துடைக்க கருப்பு கைக்குட்டையோடும் மாநகரின் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்திற்கு வரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது. தவிர கருப்பு பலூன்களைப் பறக்க விடவும் ஏற்பாடுகள் நடந்ததாகத் தெரியவருகிறது. காங்கிரசாரின் இந்த திட்டம் ஓரளவு ரகசியமாக வைக்கப்பட்டாலும், தகவல் கூடு விட்டு கூடு பாய்ந்திருக்கிறது. தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து நெல்லை மாநகர காவல் ஆணையருக்கு அவசரத் தகவல் பறந்திருக்கிறது.
அதையடுத்து பாளை வ.உ.சி மைதானம் அருகேயுள்ள நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியனின் வீட்டிற்குள் காலை 11 மணியளவில் நுழைந்த போலீசார், புறப்பட்டுக்கொண்டிருந்த சங்கரபாண்டியனை தடுத்து, ‘காங்கிரஸ் கட்சியின் போராட்டம் பற்றிய தகவல் வந்ததால் நீங்கள் வீட்டைவிட்டு வெளியே செல்ல அனுமதியில்லை. வீட்டுக்காவல் சிறையில் வைக்கப்பட்டுள்ளீர்கள்’ என்று தெரிவித்ததோடு அவரை வெளியில் செல்ல அனுமதிக்கவுமில்லை. அங்கிருந்த ஒரு அறையில் அவரை அமரவைத்து காவலாக இரண்டு போலீசார் அமர்ந்து கொண்டனர். அவரது வீட்டிற்கு வெளியேயும், அந்தத் தெருவிலும் 7 போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர். மேலும் வண்ணார்ப்பேட்டையில் உள்ள நெல்லை மாநகர காங்கிரஸ் அலுவலகத்திலும் பாதுகாப்பு பணிகளுக்காக போலீசார் நிறுத்தப்பட்டதோடு காங்கிரஸ் நிர்வாகிகள் யாரும் கருப்பு உடையோடு அலுவலகம் பக்கமே வராமல் பார்த்துக்கொண்டனர். தொடர்ந்து வண்ணாரப்பேட்டை செல்லப்பாண்டியன் சிலை அருகேயும் கருப்புக் கொடியோடு யாரும் வந்துவிடக் கூடாது என்றும், வந்தால் அவர்களை உடனடியாகக் கைது செய்ய தேவையான போலீசாரும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருந்தனர். இந்த பாதுகாப்பு முறை கிட்டத்தட்ட நெருக்கடி நிலை சூழலை வெளிப்படுத்துவதாக இருந்தது. மாலையில் அமித்ஷாவின் மண்டல கமிட்டி ஆய்வுக் கூட்டம் முடிந்த பிறகே, காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் வீட்டில் காவலிலிருந்த போலீசார் 6 மணிக்குமேல் வாபஸ் பெறப்பட்டார்கள்.
இது குறித்து நாம் காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியனை தொடர்புகொண்டு பேசியபோது, “ஜனநாயக நாட்டில் தனி மனித சுதந்திரம் பறிக்கப்படுகிறது. இந்திரா காந்தி ஆட்சிக் காலத்தில் கூட அவருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட அனுமதிக்கப்பட்டிருந்தது. காங்கிரசார் வன்முறையில் ஈடுபடாமல் காந்திய வழியில் எங்க கமிட்டி அலுவலகத்திற்கு போய் உட்கார கூட அனுமதியில்லை. வாக்குத் திருட்டு பற்றி மத்திய அரசைக் கண்டித்து தலைவர் ராகுல் காந்தி பீகாரில் யாத்திரை சென்று கொண்டிருக்கிறார். அதற்கு மக்களிடையே பெருத்த வரவேற்பு இருக்கிறது. வாக்குத் திருட்டு பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அமித்ஷா நெல்லை வருகிறபோது காங்கிரஸ்காரர்கள் கருப்புச் சட்டை அணிந்து காங்கிரஸ் அலுவலகத்தில் கூடுவதற்கு ஏற்பாடு செய்திருந்தோம். இந்தத் தகவல் தெரிந்து திடீரென்று வந்த போலீசார், என்னை வெளியேற விடாமல் 7 மணி நேரத்திற்கும் மேலாக வீட்டுக் காவலில் வைத்தார்கள். ஆங்கிலேயர் காலத்தில்கூட மகாத்மா காந்தி அறவழியில் போராட முழு சுதந்திரம் கொடுத்திருந்தார்கள். மத்திய அரசு அகிம்சை வழியில் போராடுபவர்கள் மீது அடக்குமுறையை ஏவுகிறது. இங்கே என்ன காஷ்மீர் சூழலா” என்றார் அழுத்தமான குரலில். அரசியல் கட்சித் தலைவர் ஒருவர் தென்மாவட்டத்தில் இதுவரையிலும் கேள்விப் படாத வகையில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டது அரசியல் அரங்கில் அதிர்வலைகளைக் கிளப்பியிருக்கிறது.