ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 79,252 ரூபாய் கணக்கில் வராத பணம் மற்றும் முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். மாவட்ட ஆய்வுக் குழு துணைத் தலைவர் ரமேஷ் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழு, டிஎஸ்பி கணேசன், ஆய்வாளர் விஜயலட்சுமி, உதவி ஆய்வாளர்கள் ரமேஷ்பாபு, சௌகத், நிஷா ஆகியோர் இணைந்து, செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 5, 2025) இரவு முழுவதும் இந்தச் சோதனையை மேற்கொண்டனர்.

இந்த சோதனையின்போது, 13 நபர்கள் வேலைக்கு வராதபோதிலும், வருகைப் பதிவேட்டில் அவர்கள் பணிக்கு வந்ததாகக் காட்டி, அவர்களுக்குச் சம்பளமாக வழங்கப்பட்டு, பணம் கையாடல் செய்தது தெரியவந்தது. மேலும், கணக்கில் வராத 79,252 ரூபாய் பணம் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

இந்த முறைகேடு தொடர்பாக ஆற்காடு நகராட்சியின் சுகாதார அலுவலர் பாஸ்கரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் ஆற்காடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.