இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மீது புதிய வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். இத்தகைய பரபரப்பான சூழலில் அதிபர் ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் புதினும் அமெரிக்காவின் அலாஸ்காவில் நேரில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பில் ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக சுமார் 3 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனவே அமெரிக்கா - ரஷ்யா இடையேயான 2ஆம் கட்ட பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியது. 

Advertisment

அதன்படி அடுத்த சந்திப்பானது ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறும் என ரஷ்ய அதிபர் புதின் தகவல் தெரிவித்திருந்தார். மேலும் உக்ரைன் விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என ரஷ்ய அதிபர் புதின் நம்பிக்கை தெரிவித்திருந்தார். மேலும் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பதற்றம் நீடித்து வரும் நிலையில் ட்ரம்ப் - புதின் சந்திப்பு சர் சர்வதேச அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உற்று நோக்கிக் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பை, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசியுள்ளார். அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களும் அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். இதனையடுத்து இந்த சந்திப்பு குறித்து அதிபர் டிரம்ப் கூறுகையில், “ரஷ்ய அதிபர் புதின்,   உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோருடன் ஒரே இடத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தாயார்” எனவும் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில், “ரஷ்யாவுடனான போரில் துணை நின்ற ஐரோப்பிய நாடுகளுக்கு நன்றி” எனவும் தெரிவித்துள்ளார். உக்ரைனின் கார்கிவ் நகர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திவரும் நிலையில் இந்த சந்திப்பு உலக அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.