ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர பல்வேறு நாடுகள் முயன்றும், போர் நிற்கவில்லை. அதே வேளையில், இந்தப் போரில் உக்ரைனுக்கு பல்வேறு நாடுகள் பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றன. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அமெரிக்காவின் அலாஸ்காவில் வரும் 15ஆம் தேதி இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளாக உக்ரைனுடனான போர் நடந்து வரும் நிலையில், ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக அமெரிக்க அதிபர் டிரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் சந்திக்க உள்ளனர். இந்தப் பேச்சுவார்த்தையில் உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், டிரம்ப் மற்றும் புதின் சந்திப்புக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், “எங்கள்மீது நடத்தப்படும் போர் தொடர்பான பேச்சுவார்த்தையில் உக்ரைனின் குரலும் ஒலிக்க வேண்டும். உக்ரைன் இல்லாமல் எடுக்கப்படும் எந்த முடிவுகளும் அமைதிக்கு எதிரானவையாகும். அவை எந்தவித பலனையும் தராது,” என்று விமர்சித்துள்ளார்.

Advertisment

முன்னதாக, அமைதி திரும்ப சில பகுதிகளை உக்ரைன் ரஷ்யாவிடம் திருப்பி வழங்க வேண்டும் என்று டிரம்ப் கோரிக்கை வைத்திருந்த நிலையில், அதனை ஜெலென்ஸ்கி முற்றிலுமாக நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.