இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இந்தியாவிற்கான தனது முதல் அதிகாரப்பூர்வ பயணமாக மும்பை வந்தடைந்தார்.
இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று (08.10.2025) அதிகாலை மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தார். அவரை மகாராஷ்டிரா மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார், மகாராஷ்டிரா ஆளுநர் ஆச்சார்யா தேவ்வ்ரத் ஆகியோர் வரவேற்றனர். அவர் மும்பையில் உள்ள ராஜ்பவனில் பிரதமர் நரேந்திர மோடியை நாளை (09.10.2025) சந்திக்க உள்ளார். அதன் பின்னர் ஜியோ வேர்ல்ட் சென்டரில் நடைபெறும் தமைமை செயல் அதிகாரிகள் (CEO) மன்றம் மற்றும் குளோபல் ஃபின்டெக் ஃபெஸ்ட் 2025 நிகழ்வுகளில் கலந்து கொள்ள உள்ளார்.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மகாராஷ்டிரா ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத் அவரை விமான நிலையத்தில் வரவேற்றார். இது பிரதமர் ஸ்டார்மரின் முதல் இந்திய வருகை ஆகும். இந்த வருகை இரு நாடுகளுக்கு இடையேயான வலுவான மற்றும் துடிப்பான இந்தியா - இங்கிலாந்து கூட்டாண்மையில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.