UGC issued ordered Trilingual policy in higher education institutions
கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், இந்த திட்டத்தின் மூலமாக இந்தி மொழியை மறைமுகமாக திணிப்பதாகக் கூறி இந்த திட்டத்தை தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. குறிப்பாக, தேசிய கல்விக் கொள்கையில் முக்கிய அம்சமான மும்மொழி கொள்கை, தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல என்று தமிழக அரசியல் தலைவர்கள், அந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். அதனால், மத்திய அரசால் இந்த திட்டத்தை நாடு முழுவதும் முழுவதுமாக அமல்படுத்த முடியவில்லை.
இந்த நிலையில், தேசிய கல்வி கொள்கையின்படி நாட்டின் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் குறைந்தபட்சம் மூன்று மொழிகல் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து மத்திய மாநில பல்கலைக்கழகங்கள், தனியார் மற்றும் நிகர் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களுக்கு, யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் தெரிவித்துள்ளதாவது, ஒவ்வொரு மாணவர்களும் தனது தாய்மொழி அல்லது தாங்கள் வசிக்கும் மாநிலத்தின் மொழி, ஆங்கிலம் ஆகியவற்றை தவிர மூன்றாவதாக ஏதேனும் ஒரு இந்திய மொழியை கற்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில், குறைந்தபட்சம் மூன்று மொழிகளை கற்பிப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் இருக்க வேண்டும் என்றும், இளங்கலை, முதுகலை, ஆராய்ச்சி மாணவர்களுக்கும், அனைத்து ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கும் மூன்றாம் மொழியை கற்க ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. தேசிய கல்வி கொள்கையின்படி பள்ளிகளில் மூன்று மொழிகளை கட்டாயமாக்கும் திட்டத்திற்கு தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான எதிர்ப்பு நிலவி வரும் சூழலில் உயர்கல்வி நிறுவனங்களிலும் மும்மொழி கற்பிக்கும் திட்டத்தை அமல்படுத்த இருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது.
Follow Us