Udhayanidhi Stalin's speech at pongal function in chennai
தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் வரும் 15ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை மக்கள் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். அதே சமயம், அரசியல் கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் நேற்று (10-01-26) சென்னையில் பொங்கல் பண்டிகை விழா நடைபெற்றது. இந்த விழாவில் துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பொங்கல் விழாவை கொண்டாடினார். மேலும், பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசை வழங்கினார்.
இந்த விழாவில் பேசிய அவர், “இந்தியாவிலேயே சிறப்பாக செயல்படுகின்ற மாநிலமாக அதிக வளர்ச்சி அடைகின்ற மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு இன்றைக்கு திகழ்ந்து கொண்டிருக்கிறது. இவ்வளவு வளர்ச்சியும், இவ்வளவு சாதனையும் பார்க்கும் போது ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு தமிழ்நாட்டை பார்க்கும் போது எரிச்சல் வருகிறது. தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதியையும் தருவதில்லை, தமிழ்நாட்டுடைய உரிமைகளை தொடர்ந்து பறித்து இருக்கிறோம் இருந்தாலும் தமிழ்நாடு எப்படி இவ்வளவு சாதனை செய்து கொண்டிருக்கிறது என்று ஒன்றிய அரசு எதையாவது செய்து வருகிறார்கள். கல்வி உரிமை, நிதி உரிமை, மொழி உரிமை மூன்றையும் தொடர்ந்து பா.ஜ.க அரசு பறித்து வருகிறது.
ஆனால், பா.ஜ.க அரசு கொண்டு வரும் அனைத்து முயற்சிகளையும் முதல்வர் முறியடித்து வருகிறார். இந்தியாவுக்கு எடுத்துக்காட்டாக நம்முடைய முதல்வர் இருக்கிறார். ஒன்றிய அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தால் மற்ற மாநில முதலமைச்சர்கள் தமிழ்நாட்டு மக்கள் என்ன முடிவெடுக்கிரார்கள்? தமிழ்நாடு அரசு என்ன முடிவெடுக்கிறது? என்று தான் பார்க்கிறார்கள். இந்தியாவிலேயே பாசிச சக்திகளுக்கு எதிர்த்து குரல் கொடுக்கக்கூடிய முதல்வராக நம்முடைய முதல்வர் இருக்கிறார். தமிழ்நாட்டு மக்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறார்கள். பாசிச பா.ஜ.கவையும் அடிமை அதிமுகவை நிச்சயம் மொத்தமாக மீண்டும் நிராகரிக்கத்தான் போகிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அமித் ஷாவை பார்ப்பதற்காக டெல்லி சென்று வந்திருக்கிறார்.
தன்னுடைய அரசியல் லாபத்திற்காக, தமிழ்நாட்டுடைய பெருமைகளை உரிமைகளை எல்லாம் எடப்பாடி பழனிச்சாமி அடகு வைக்க ஆரம்பித்திருக்கிறார். திமுகவை வீழ்த்துவேன் என்று அவர் ஊர் ஊராக போய் சொல்லிட்டு இருக்கிறார், சபதம் போட்டிருக்கிறார். திமுகவை அழிப்பேன் என்று புறப்பட்டவன் எல்லாம் அழிஞ்சு தான் போயிருக்கிறார்களே தவிர திமுகவை தொட்டு பார்க்க கூட இன்று வரைக்கும் யாரும் கிளம்பி வர முடியாது. பழைய அடிமைகள், புதிய அடிமைகளும் இன்றைக்கு சேர்ந்து வருவார்கள். அவர்களை எல்லாம் களத்தில் எதிர்கொள்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அடிமைகளையும், அவர்களுடைய டெல்லி எஜமானர்களையும் நாம் சேர்ந்து வீழ்த்தியே ஆக வேண்டும்” என்று கூறினார்.
Follow Us