கோவை மாவட்டத்தில் திமுக இளைஞர் அணி மேற்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் இன்று (22-02-26) நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் திமுக இளைஞரணிச் செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.

Advertisment

அதில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநகர செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், என எல்லாம் இளைஞர் அணியில் ட்ரைனிங் எடுத்து தாய் கழகத்திற்கு போனவர்கள் தான், அதற்கு இந்த மேடையே ஒரு சிறந்த உதாரணம். நம்முடைய முதலமைச்சர் மகளிருக்காக இந்த மாதம் மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்தார். எதிர்க்கட்சிகளுக்கு மிகப்பெரிய ஒரு ஷாக்கை கொடுத்தார். மகளிர் அக்கவுண்டில் காலையில் 6 மணிக்கு திடீரென்று ரூ.5,000 கொடுத்தார். இது மகளிருக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்தார். பா.ஜ.கவுக்கும் அதன் அடிமை கூட்டத்துக்கு மிகப்பெரிய ஷாக்.

Advertisment

சட்டமன்றத் தேர்தலை காரணம் காட்டி நீதிமன்றத்துக்கு சென்று எப்படியாவது அடுத்து மூன்று மாதத்துக்கு இந்த உரிமை தொகையை எப்படியாவது நிறுத்திவிடலாம் என்று முயற்சி செய்தார்கள். அதை முறியடித்து ஒவ்வொருத்தருக்கும் கோடை சிறப்பு நிதி ரூ.2,000யும் சேர்த்து ரூ.5,000 பணத்தை முதல்வர் கொடித்துள்ளார். அத்துடன் மகளிர் உரிமைத் தொகையை 2,000 ரூபாயாக உயர்த்தி கொடுப்பேன் என்ற வாக்குறுதியும் கொடுத்துள்ளார். இது தா நம்முடைய திராவிட மாடல் ஆட்சிக்கும், சங்கி கூட்டத்திகும் இருக்கக்கூடிய வித்தியாசம். முதல்வர் 7 மணிக்கு கிரெடிட் செய்துவிட்டார். நம்முடைய தமிழ்நாட்டு பெண்கள் 9 மணிக்கெல்லாம் வங்கிக்கு சென்று பணத்தை எடுத்துவிட்டார்கள். அந்த அளவிக்கு ஒன்றிய அரசு மீது தமிழ்நாட்டு மக்களுக்கும், மகளிருக்கும் பயம். பிரதமர் மோடி அப்பப்ப தொலைக்காட்சியில் வருவார், அவர் எப்போது தொலைக்காட்சியில் வந்தாலும் மக்கள் ஒருவிதமான பயத்துக்கு போய்விடுவார்கள். ஆனால் முதல்வர் தொலைக்காட்சியில் வந்தால் மக்கள் மகிழ்ச்சியோடு பார்க்கிறார்கள். இது தான் நம்முடைய முதல்வருக்கும், ஒன்றிய பிரதமருக்குமான வித்தியாசம்.

மக்களிடம் இருந்து பிடுங்குகிற ஆட்சி, ஒன்றிய பா.ஜ.க ஆட்சி.. மக்களுக்கு எப்போதுமே கொடுக்கின்ற ஆட்சி நம்முடைய திராவிட மாடல் ஆட்சி. இப்படி பல்வேறு திட்டங்கள் செய்வதால் தான் இந்தியாவிலேயே தமிழ்நாடு 11.19% வளர்ச்சியோடு தலைசிறந்த மாநிலமாக இருக்கிறது. அதற்கு இடைஞ்சல் செய்ய திட்டம் போட்டு ஒன்றிய பா.ஜ.க அரசு செயல்பட்டு வருகிறது. மொழி உரிமை, கல்வி உரிமை, நிதி உரிமை என ஒவ்வொரு உரிமையும் பறிக்க பார்க்கிறார்கள். புதிய கல்வி கொள்கை கொண்டு வந்து தமிழ்நாட்டுக்குள் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் நுழைக்க பார்க்கிறார்கள். இதுவரைக்கும் தமிழ்நாட்டு பக்கமே எட்டி பார்க்காத அமித்ஷாவும் மோடியும், தேர்தல் வருது என்ற உடனே வர ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் மட்டும் தான் வருவார்கள், தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் வராது, எந்த திட்டமும் வராது. சமீபத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு எந்த திட்டத்தையும் ஒதுக்கவில்லை. அவர்கள் பட்ஜெட்டை படிப்பதற்கு முன்பே தமிழ்நாட்டில் இருந்து பாராட்டு குரல் வருகிறது. நம்முடைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தான். பட்ஜெட் சூப்பர் என்று டயர் புகழ் பழனிசாமி ஃபயர் விட்டுட்டு இருக்கிறார். அரசியலில் பல முரட்டு பக்தர்களையும், தொண்டர்களையும் பார்த்திருப்போம். ஆனால், ஒரு முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிசாமி மோடிக்கு மாறி இருக்கிறார்.

Advertisment

சில நாட்களுக்கு முன்பு எம்.ஜி.ஆர் படத்தை பார்த்து எடப்பாடி பழனிசாமி கண்கலங்கினார். இன்றைக்கு எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்திருந்தால் என் கட்சியை இப்படி ஆக்கிட்டீங்களே என்று எம்.ஜி.ஆர் இவரை பார்த்து எப்படி அழுதிருப்பார் என்று நான் யோசித்து பார்த்தேன். 2019இல் அதிமுகவை பா.ஜ.கவுக்கு அடகு வைத்தார். 2021இல் அதிமுகவை பா.ஜ.கவுக்கு லீஸுக்கு விட்டார், இப்போது 2026இல் அதிமுகவை பா.ஜ.கவுக்கு மொத்தமாக விற்றுவிட்டார். தன்னுடைய சுயநலத்திற்காக எடப்பாடி பழனிசாமி அதிமுகவை அழிவுபாதையில் கொண்டு போயிட்டு இருக்கிறார். ஆனால், நம்முடைய முதல்வர், நம்முடைய தமிழ்நாட்டை அறிவு பாதையில் அழைத்து போய்க் கொண்டிருக்கிறார். அதனால்தான் சங்கிகளுக்கு தமிழ்நாட்டை பார்த்தாலே எப்பொழுதுமே ஒரு வயிற்றெரிச்சல்.. இன்றைக்கு இந்தியாவிலேயே ஒரு இயக்கத்தை எப்படியாவது மிரட்டலாம், உருட்டலாம் என்று ஈடி, சிபிஐ, இப்படி பல்வேறு அமைப்புகளை வைத்து மிரட்டிட்டு இருக்கிறார்கள்.

நாங்கள் ஈடிக்கும் பயப்பட மாட்டோம், மோடிக்கும் பயப்பட மாட்டோம். மோடி இல்லை மோடியுடைய டாடி வந்தாலும் நாங்கள் எதிர்க்க தயாராக இருக்கிறோம். இந்த லட்சணத்தில் மோடி தமிழ்நாட்டுக்கு  என்ன டபுள் இன்ஜின் சர்க்கார் வேண்டும் என்று பேசுகிறார். தமிழ்நாட்டுடைய இன்ஜின் பலமான ஒரு திராவிட மாடல் இன்ஜின். இது எப்போதுமே தனி ட்ராக்கில் முன்னேறி போயிட்டு இருக்கிற இன்ஜின். மோடிக்கு ஏற்ற ஒரு அடிமையாக எடப்பாடி பழனிச்சாமி கிடைத்திருக்கிறார். பா.ஜ.கவுடைய நோக்கம், மக்களை எப்படியாவது தொந்தரவு செய்து மதத்தை வைத்து வெறுப்பை பரப்ப வேண்டும் என்பது தான். அதனால் ஒவ்வொரு மாநிலமாக வெறுப்பு அரசியலை பரப்பி கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வால் ஆட்டலாம் என்று முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்ற மகத்தான தலைவர் இருக்கிற வரைக்கும் பா.ஜ.கவுடைய கலவர அரசியலை தமிழ்நாட்டு மக்கள் என்றைக்கும் உள்ளே நுழைய விடமாட்டார்கள்” என்று பேசினார்.