Udhayanidhi Stalin's rousing speech about SelvaPerunthagai
தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. மேலும், தவெக தலைவர் விஜய் - காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இடையே கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்ததாகச் செய்தி வெளியானது. இந்த தகவலுக்கு, தவெக துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மற்றும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் மறுப்பு தெரிவித்திருந்தனர்.
இந்த சூழ்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று முன் தினம் திடீரென டெல்லி சென்றார். இதனையடுத்து, திமுக - காங்கிரஸ் உடனான கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், கூட்டணி தொடர்பான சர்ச்சை தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலகலப்பாக பேசியுள்ளார். சென்னை சர்.பிடி தியாகராயர் அரங்கத்தில் புத்தக வெளியீட்டு விழா ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “நாங்கள் உள்ளே வரும் செல்வப்பெருந்தகை இந்த நிகழ்ச்சியில் இல்லை. அவர் முன்னாடியே வந்துவிட்டு, ஒரு அவசர அழைப்புக்காக திரும்பி வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றிருந்தார். அதன் பிறகு ஒவ்வொருத்தராக பேச ஆரம்பித்துவிட்டோம். கடைசி வரைக்கும் இவர் வர மாட்டார் போல, இவர் வருவாரா மாட்டாரா? என நினைத்தோம். உதயநிதி அப்செட், செல்வப்பெருந்தகை ஆப்செண்ட் என பத்திரிகையாளர் நண்பர்கள் எல்லாம் தலைப்புகள் ரெடி பண்ணி வச்சிருந்தாங்க. கடைசியில் அவர் வந்துவிட்டார். அவரும் சரி அந்த இயக்கமும் சரி, சரியான நேரத்தில் எங்கே வர வேண்டுமோ வந்துவிட்டார்கள். அவர்கள் போனால் தானே வர முடியும்” என்று கலகலப்பாக பேசினார்.
Follow Us