Udhayanidhi Stalin's criticism Sengottaiyan has changed party on the advice of Amit Shah
ஈரோடு மாவட்டத்தில் புதிய திராவிட கழகம் சார்பில், ‘வெல்லட்டும் சமூகநீதி’ என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அதில் அவர், ‘நாம் மொழியால் தமிழர்கள், இனத்தால் திராவிடர்கள், நாட்டினால் இந்தியர்கள் என்று கலைஞர் சொன்னது. இந்த திராவிடன் என்ற சொல்லை தந்தை பெரியாரோ, பேரறிஞர் அண்ணாவோ, டாக்டர் கலைஞரோ முதன் முதலாக பயன்படுத்தவில்லை நாம கண்டுபிடித்த வார்த்தை கிடையாது. 1856ஆம் வருடம், கால்டுவெல் தென்னிந்திய மொழிகளை ஆய்வு செய்து ஒரு புத்தகம் எழுதினார். அந்த புத்தகத்துடைய தலைப்பு திராவிட மொழிகளுடைய ஒப்பிலக்கணம் என்ற தலைப்பு. அதில் ஆரியர் என்றால் யார்? திராவிடன் யார்? ஆரியர், திராவிடர் என்பதெல்லாம் ஒரு இனத்தை குறிக்கும் பெயர்கள் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார. இவ்வளவு தெளிவான வரலாறும் ஆய்வுகளும் இருந்தும், இன்றைக்கும் நம்மை வேண்டுமென்றே சில சங்கிகள் இந்த திராவிடம் என்ற வார்த்தைக்கு பல கலங்கங்களை கற்பிக்கிறார்கள், குழப்பத்தை ஏற்படுத்திறார்கள்.
முன்னாடி இங்கு இருக்கக்கூடிய சங்கிகள் தான் இதை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், இன்றைக்கு ஆளுநரே அந்த வேலையில் இறங்கி இருக்கிறார். சென்ற வாரம், தமிழ்நாட்டுடைய ஆளுநர் ஆர்.என் ரவி, ஒரு நிகழ்ச்சியில் பேசும் பொழுது, திராவிடம் என்ற வார்த்தை ஒரு கற்பனையான வார்த்தை என்று குறிப்பிடுகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு, இதே ஆளுநர், திராவிடம் என்பது காலாவதியான ஒரு கொள்கை என்று சொன்னார். அதனால் தான் ஆளுநரின் திமிரை அடக்கி காட்டுவோம் என்று முதல்வர் சொன்னார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் ஆளுநர் இப்படி பேசியிருக்கிறாரே என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், நீங்கள் என்கிட்ட கேட்கக்கூடாது, பெரிய அறிஞர்களிடம் தான் கேட்க வேண்டும். திராவிடம் பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னார். தன்னுடைய கட்சியினுடைய பெயரில் திராவிடம் என்ற பெயரை வைத்துகொண்டு, அதையே அவர் விட்டுக்கொடுத்தார். திராவிடம் என்ற பெயரையே மறந்தவர் தான் எடப்பாடி பழனிசாமி. திராவிடத்தை மட்டும் அவர் மறக்கவில்லை, எம்.ஜி.ஆர், பேரறிஞர் அண்ணாவையே மறந்துவிட்டார். இப்போதைக்கு அவர் மனதில் முழுக்க முழுக்க நிறைந்திருப்பது அண்ணாவோ, எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதாவோ கிடையாது. அவர் மனதில் முழுக்க முழுக்க நிறைந்திருப்பது வெறும் அமித்ஷா மட்டும் தான்.
நாம் யார் கூடவாவது போட்டி போட வேண்டும் என்று நினைத்தால் நீ பெரிய ஆளா, நான் பெரிய ஆளா வா மோதிப் பார்க்கலாம் என்று தான் சவால் விடுவோம். ஆனால், இன்றைக்கு அமித்ஷாவுக்கு நீ சிறந்த அடிமையா? உன்னைவிட நாம் மிகச் சிறந்த அடிமையா என்ற போட்டி தான் அதிமுகவில் இருக்கிறது. நான் சிறந்த அடிமை என்று எடப்பாடி பழனிசாமி 8 அடி பாய்ந்தார் என்றால் அங்கு இருக்கக்கூடிய சிலர் உன்னை விட நான் மிகச் சிறந்த அடிமை என்று 16 அடி பாய்வதற்கு தயாராக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் அதிமுக உட்பட பல கட்சிகளுக்கு டெல்லியில் இருக்கக்கூடிய அமித்ஷா வீடு தான் தலைமை அலுவலகமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி பல கார்கள் மாறிப் போய் அமித்ஷாவை சந்தித்துவிட்டு வந்தார். அவர் வழியில் அதே மாதிரி இந்த பகுதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக அமைச்சர் ஹரித்வார் போறேன் என்று கூறிவிட்டு அமித்ஷாவை போய் பார்த்துவிட்டு வந்தார். பார்த்துவிட்டு வந்த கையோடு, அவருடைய ஆலோசனைப்படி இன்றைக்கு இன்னொரு கட்சியில் போய் அவர் சேர்ந்துவிட்டார்.
அதிமுகவில் இருக்கக்கூடிய மூத்த முன்னாள் அமைச்சர்கள் கூட இன்றைக்கு எந்த கட்சியில் சேர வேண்டும் என்று பா.ஜ.கவிடம் அனுமதி வாங்கிட்டு தான் போய் சேர்கிறார்கள். அந்த அளவுக்கு தலைமை அலுவலகம் அவர்களை கண்ட்ரோல் செய்து வைத்திருக்கிறது. இதுவெல்லாம் நாம் நினைக்கிற மாதிரி கட்சி மாற்றம் கிடையாது, வெறும் பிராஞ்ச் மாற்றம் அவ்வளவு தான்” என்று கூறினார்.
Follow Us